ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சித்திரை தேர்த்திருவிழா துவங்கியது; பல்லக்கில் நம்பெருமாள் புறப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2024 12:04
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில் இரண்டாம் திருநாளான இன்று காலை நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் சித்திரை தேர் உற்சவம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவில் நேற்று 28ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கொடியேற்ற மண்டபம் சேர்தார். தொடர்ந்து கொடிப்படம் புறப்படுதல் நடைபெற்று துவஜாரோஹணம் எனும் கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கிறார். விழாவின் 2ம் நாளான இன்று 29ம் தேதி இன்று காலை நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது. மாலை கற்பக விருட்சம் வாகனத்திலும், நாளை(30ம் தேதி) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், மே 1ம்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 2ம் தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 3ம் தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் சித்திரை வீதியில் உலா வர உள்ளார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் 6ம் தேதி நடைபெறுகிறது.