பதிவு செய்த நாள்
03
மே
2024
03:05
ஈரோடு; பவானிசாகர் அணையின் நீர் இருப்பு, 3.40 டிஎம்சியாக சரிந்துள்ள நிலையில், 6 ஆண்டுகளுக்கு பின் நீர்தேக்கத்தில் மறைந்திருந்த ‘டணாய்க்கன்’ கோட்டை மற்றும் மாதவராயப் பெருமாள் கோவில் வெளியே தெரிந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில், 600 ஆண்டு பழமை வாய்ந்த, டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள், உள்ளன. அணை கட்டுமான பணிக்கு முன்னதாக அப்பகுதியில் வசித்து வந்த மக்களின், வழிபாட்டு தலமாக அவை திகழ்ந்தன. பணி துவங்கியபோது நீர்த்தேக்க பகுதியில் வசித்த கிராம மக்கள், பவானிசாகர் சுற்றுவட்டாரத்தில் குடியேறினர். கோவிலில் இருந்த சிலைகளை எடுத்து வந்து, பவானிசாகரில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் கோவில் கட்டி பிரதிஷ்டை செய்தனர். 1955ல் கட்டுமானப்பணி முடிந்தபின், முழுதும் கற்களால் கட்டப்பட்ட கோவில் மற்றும் மண்டபங்கள் அணை நீரில் மூழ்கின. காலப்போக்கில் சிதிலமடைய தொடங்கின. அணை நீர்மட்டம், 5௦ அடிக்கு கீழ் குறையும்போது, டணாய்க்கன் கோட்டை மாதவராய பெருமாள் கோவில், சோமேஸ்வரர் மற்றும் மங்களாம்பிகை கோவில்கள் வெளியே தெரியும். தற்போது நீர்மட்டம் சரிந்துள்ளதால், மாதவராய பெருமாள் கோவில், ‘டணாய்க்கன்’ கோட்டை வெளியே தெரிய துவங்கியுள்ளது.