பதிவு செய்த நாள்
09
மே
2024
05:05
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர்.
அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். (அதனுள் காசுகளைப் போடுவது, காசுகளைப் பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.) கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருளான உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடிவந்துவிடும். முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது. பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள்.