பதிவு செய்த நாள்
09
மே
2024
03:05
சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திரிதியை திதியை அட்சய திரிதியையாக கொண்டாடுகிறோம். அட்சயம் என்றால் வளர்தல். திரிதியை என்றால் மூன்றாம் நாள். இன்று தொடங்கும் செயல்கள் வெற்றி பெறும். அதைப் போல் வாங்கும் பொருட்களும் பெருகும். தர்மம் செய்தால் புண்ணியம் சேரும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துங்கள்.
அட்சய திரிதியை நாளில் கலசம் வைத்து பூஜை செய்வது விசேஷம். இதற்காக பூஜையறையை அலங்கரித்து பலகை மீது வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி கலசம் வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெல்லை நிரப்புங்கள். குபேர லட்சுமி படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு மஞ்சளில் பிள்ளையார் பிடியுங்கள். அரிசி, உப்பு, பருப்பை வைக்க வேண்டும். அட்சதை, பூக்களை வைத்தபடி மகாலட்சுமியே வருக என பிரார்த்தனை செய்யுங்கள். அதன்பின் குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வணங்கியபின் மகாலட்சுமி 108 போற்றியை பாடுங்கள். பால் பாயாசம் பிரசாதத்தை நைவேத்யம் செய்யுங்கள்.
மலரும் தாமரை; திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் சிவனின் பெயர் தியாகராஜர். இவரை மகாலட்சுமி வழிபட்டதால் இக்கோயிலுக்கு கமலாலயம் என்றும், இங்குள்ள குளத்திற்கு கமலாலய தீர்த்தம் என்றும் பெயர். கமலம் என்றால்
தாமரை. தாமரையில் அமர்ந்திருப்பதால் கமலா கமலவல்லி எனப் பெயர் பெற்றாள் மகாலட்சுமி. திருவாரூர் தியாகராஜரைத் தரிசிப்போரின் முகமும், மனமும் தாமரை போல மலர்ந்திருக்கும்.
நல்ல நாள் ;குழந்தைகளுக்கு முதன் முதலில் சோறுாட்ட ஏற்ற நாள் அட்சய திரிதியை. இந்நாளில் இசை, நடனம் பயிலத் தொடங்குவதும், உபநயனம் நடத்துவதும் சிறப்பு. தங்கம், வெள்ளி ஆபரணங்கள், வீட்டுக்குத் தேவையான உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நல்லது. விதைத்தல், உரமிடுதல், எருவிடுதல், அறுவடை செய்தல், தானியத்தை சேமித்தல், கால்நடைகள் வாங்குதல் போன்ற பணிகளை செய்யலாம்.