கருணையே மிகச்சிறந்த அஸ்திரம் என்கிறார் ஆதிசங்கரர். இவரை சிவபெருமானின் அவதாரம் என்பார்கள். இவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகிலுள்ள காலடியில் அவதரித்தார். இங்கு திருக்காலடியப்பன் என்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது. இவர் பாடிய கனகதாரா ஸ்தோத்திரம் மிகவும் புகழ்பெற்றது. ஆதிசங்கரர், அன்றாடம் பிட்சை எடுத்து உணவு கொண்டு வருவார். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த அவர், தன் விரதத்தை முடிக்க ஏழை பிராமணர் அயாசகன் வீட்டு வாசலில் நின்று, பவதி பிக்ஷõம் தேஹி என்று அழைத்தார்.வீட்டிலிருந்த அயாசகனின் மனைவி, தானம் கொடுக்க எதுவும் இல்லாததால், தன்னிடமிருந்த ஒரு காய்ந்த நெல்லிக்கனியை பிøக்ஷ இட்டாள். இந்தக் கருணைச் செயல், சங்கரரின் கண்களை கண்ணீர் குளமாக்கியது. அக்குடும்பத்தின் வறுமை நீங்க, லட்சுமி தேவியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடி துதித்தார். இவர் 19வது ஸ்லோகத்தை பாடி முடித்த போது, அந்த ஏழை பெண்ணின் வீடு முழுவதும் தங்க நெல்லிக்கனி மழை பொழிந்தது.
கனகதாரா யாகம்: இந்த நிகழ்ச்சியின் நினைவாக ஆண்டுதோறும் காலடி கண்ணன் கோயிலில் கனகதாரா யாகம் நடந்து வருகிறது. உலக நன்மைக்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருகவும் அட்சய திரிதியையை ஒட்டி யாகம் நடப்பது மற்றொரு சிறப்பம்சம். யாகத்தில் ஆதிசங்கரரின் 32 வயதை குறிக்கும் வகையில் 32 நம்பூதிரிகள் யாகத்தை நடத்துகின்றனர். இந்த யாகத்தில் மகாலட்சுமி யந்திரமும், தங்க நெல்லிக்கனிகளும் வைத்து. கனகதாரா ஸ்தோத்திரம் 10008 தடவை ஜபிக்கப்படும். நாளை அட்சய திரிதியை முன்னிட்டு காலை கணபதி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமத்த்திற்கு பின் காலை 9 மணிக்கு தங்க நெல்லிக்கனிகளால் மகாவிஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆதிசங்கரஜெயந்தியுடன் திருவிழா நிறைவடைகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகள் பிரசாதமாக கோயிலில் விற்பனை செய்யப்படுகிறது. தங்க நெல்லிக்கனியை பூஜையறையில் வைத்து, கனகதாரா ஸ்தோத்திரம் படித்தால் உங்கள் வீட்டிலும் தங்கம் மழைபோல் பொழிந்து செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.