தானம் செய்பவன் உள்ளக்களிப்புடன் அமைதி பெறுகிறான். அவனுக்கு கவலையுமில்லை. சஞ்சலமுமில்லை. செல்வத்தைச் சேர்த்து வைக்கும் கருமி பாவத்தை சேர்த்து வைக்கிறான். முடிவில் எல்லாவற்றையும் இழக்கிறான். திரவிய தானம், தர்மதானம் என தானத்தில் இருவகை உள்ளது. இதில் தர்மதானமே உயர்ந்தது. தயாளம், தர்மகுணம் உள்ளவனை எல்லாரும் விரும்புவர். அவனுடைய நட்பைப் பெற முட்டி மோதுவர். அவனுக்கு மிகவும் மதிப்பு உண்டு. இறக்கும் சமயத்தில் அவனது உள்ளம் சாந்தியும் மகிழ்ச்சியும் பெற்று விளங்கும். அவனுடைய தானங்கள் நன்கு பழுத்த கனியாகி அவனுக்குப் பயனளிக்கும். நமது உணவை பிறருக்கு அளிப்பதால், நாம் அதிகவலிமை பெறுவோம். உடைகள் அளிப்பதால் நாம் அதிக அழகு பெறுவோம். பரிசுத்தமான சத்தியநிலையங்களை அமைப்பதால் நாம் அரிய பொக்கிஷங்களை அடைவோம். தீயவர்களுடன் சேராதீர்கள். இழிந்தவர்களுடன் இணங்க வேண்டாம். ஒழுக்கம் உள்ளவரோடு உறவாடுங்கள். அறிஞர்களுடன் தொடர்புவைத்திருங்கள். யாரைச் சந்தித்தாலும் புண்ணியமான விஷயங்களை மட்டுமே பேசுங்கள். அது முடியாதென்றால் மவுனமாக இருங்கள். இந்த இரண்டில் ஒன்றே உங்களுக்கு நல்லது.