பதிவு செய்த நாள்
02
ஆக
2024
03:08
காஞ்சிபுரம்; தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், தமிழகத்தின் புனித காவிரி ஆற்றுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். தென்னிந்திய பாரம்பரியத்தின்படி, ஒருவர் காவிரி ஆற்றின் கரையில் வசிக்காவிட்டாலும், அருகில் உள்ள குளம், கோவில் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு சென்று, அதில் உள்ள தெய்வீக நதியை ஆராதனை செய்து பூஜை செய்யலாம்.
காவிரி அஷ்டோத்ரம் அல்லது லக்ஷ்மி அஷ்டோத்ரம் அர்ச்சனையை தொடர்ந்து ஷோடசோபசாரம், நைவேத்யம் மற்றும் தீபாராதனை செய்யலாம். அதன்படி, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பண்டிதர்கள் ஆண்டுதோறும் ஸ்ரீமடம் முகாமில் சிறப்பு பூஜை நடத்தி வருகின்றனர். நேற்று அதிகாலை காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுக்கிரஹத்துடன், ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டபத்தை ஒட்டியுள்ள பாலாற்றுக்கு பக்தர்களுடன் சென்ற பண்டிதர்கள், காவிரி பூஜை செய்தனர். புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் ஸ்ரீமடம் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கப்பட்டது. விழாவில், சிறப்பு நைவேத்ய பிரசாதம் வழங்கப்பட்டது.