பதிவு செய்த நாள்
25
ஆக
2024
06:08
பழநி; பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு இரண்டாம் நாளான இன்று, கண்காட்சி அரங்கத்தை பார்வையிட பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு, நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். ‘‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றிடைந்துள்ளது ’’என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
பழநியில் அவர் கூறியதாவது: தமிழக முதல்வராக ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 39 மாதங்களில் கோயில்கள் வளர்ச்சிக்காகவும், ஆன்மிக அன்பர்களின் அடிப்படை தேவைகளை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. முதல் நாள் மாநாட்டில் 600 கலைஞர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து நுாற்றுகணக்கானோர் பங்கேற்றனர். மாநாட்டுக்கு 25 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் முதல் நாளிலே லட்சக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்துள்ளனர். 1.25 லட்சம் பக்தர்களுக்கு முதல் நாள் மாநாட்டில் உணவு வழங்கப்பட்டிருக்கிறது. 50ஆயிரம் பேருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாநாட்டில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன .
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாநாடு குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக நிருபர்கள் கேள்வியெழுப்பியபோது அதற்கு பதலளித்த அமைச்சர் சேகர்பாபு , எல்லோருக்கும் எல்லாம் என்கிற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மாநாடு நிறைவடையும் நேரத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் போது எங்கோ ஒரு மூலையில் நடந்த விஷயத்தை பற்றி இங்கு கேள்விகள் கேட்டு மகிழ்ச்சியை கெடுக்க வேண்டாம். இந்த நிகழ்ச்சி தமிழக அரசு , முருக பக்தர்களால் நடத்தப்படுகிறது . அதனால்தான் முருகன் புகழ் பாடும் 16ஆன்மிக அடியார்களை அழைத்து அவர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்படுகிறது. இது முழுக்க அரசியல் சார்பற்ற நிகழ்ச்சி. தமிழக அரசும் ஹிந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து நடத்தும் விழா. இந்த துறைக்கு அந்த கடமை இருக்கிறது என்றார்.