பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா யாக பூஜையுடன் துவக்கம்
பதிவு செய்த நாள்
28
ஆக 2024 02:08
பொள்ளாச்சி; பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா யாக பூஜையுடன்துவங்கியது. பொள்ளாச்சியில், 100 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 22 ஆண்டுகளான நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கும்பாபிஷேகத்துக்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, விமான கோபுர பாலாலயம் கடந்த பிப்., மாதம் 14ம் தேதி நடந்தது. இதை தொடர்ந்து, கோவில் வர்ணம் பூசுதல், சன்னதிகள் புதுப்பிப்பு உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், கோவில் அருகே யாகசாலை அமைப்பதற்காக கடந்த மாதம், 31ம் தேதி பந்தக்கால் போடும் பணி நடந்தது. அதன்பின், ஒன்பது ஹோம குண்டங்கள் அமைக்கும் பணி நடந்தது. கும்பாபிஷேக விழா இன்று (28ம் தேதி) காலை, 9:05 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, புண்யாஹம், பஞ்சகவ்யம், தேவதா அனுக்ஞை, தன பூஜை, மஹா கணபதி ஹோமம், காலை, 11:15 மணிக்கு அஷ்ட திரவிய ஹோமம், திரவியாஹுதி, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. மாலை, 4:00 மணிக்கு மேல், இரவு, 8:30 மணிக்குள் யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, அக்னிகார்யம், திரவியாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. வரும், 29ம் தேதி காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக துவக்கம், த்வரா, வேதிகார்ச்சனை, பாவனாபிஷேகம், சங்க்யா ஹோமம், காலை, 12:30 மணிக்கு திரவியாஹுதி, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக துவக்கம், வேதிகார்ச்சனை, வேதகாம, திருமுறை இன்னிசை விண்ணப்பம், நவசக்தி அர்ச்சனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. வரும், 30ம் தேதி காலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக துவக்கம், பிம்பசுத்தி, காலை, 8:15 மணிக்கு பத்ரகாளியம்மன் விமான கோபுரம், பரிவார விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8:45 மணிக்கு மேல், 9:15 மணிக்குள் விநாயகர் மற்றும் அனைத்து பரிவாரங்கள், அன்னை பத்ரகாளியம்மன் மூலாலய மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. காலை, 9:00 மணிக்கு மேல் அன்னதானமும்; மாலை, 5:30 மணிக்கு மஹா அபிஷேகம், விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து, வரும், 31ம் தேதி முதல், 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது.
|