பதிவு செய்த நாள்
31
ஆக
2024
11:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
விழாவை முன்னிட்டு சுவாமி சன்னதி முன் 62 அடி உயர தங்கக்கொடிமரம் முன் சர்வ அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் சுவாமி எழுந்தருளினர். யாகசாலை பூஜைகளுக்கு பின்னர் கொடிக்கு பூஜைகள், கொடிமரத்திற்கு பாலாபிஷேகம் நடந்தது. பின் வேத மந்திரம் முழங்க, மங்கள நாதஸ்வர மேளம், சங்குகள் ஒலிக்க ஆவணி மூல திருவிழா கொடியேற்றப்பட்டது. கொடிமரத்திற்கு மலர்கள் தூவி, சர்வ தீபாராதனைகள் காண்பிக்கப் பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செப்.,16 ம் தேதி வரை நடைபெறும் விழாவில், சுவாமி தினமும் காலை, மாலையில் நான்கு ஆவணி மூல வீதிகளில் பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதி உலா வந்தும், மண்டகப்படிகளில் எழுந்தருளியும் அருள்பாலிக்கின்றனர். நேற்று 29ம் தேதி துவங்கிய விழா வரும் 16ம் தேதி வரை சிறப்பாக நடைபெற்ற உள்ளது. விழாவில் 11.09.2024, புதன்கிழமை இரவு 6.30 மணி முதல் 6.45 மணிக்குள் கும்ப லக்கனத்தில் சுவாமி சந்நிதி ஆறுகால் பீடத்தில் அருள்மிகு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகமும், 13.09.2024, வெள்ளிக்கிழமை பிட்டுத்தோப்பு மண்டபத்தில் பிற்பகல் 1.05 மணிக்கு மேல் 1.29 மணிக்குள் தனுர் லக்கனத்தில் பிட்டுக்கு மண்சுமந்த லீலையும், மண்சாத்தலும் நடைபெறுகிறது. 13.09.2024, பிட்டுத்திருவிழா அன்று காலையில் சுவாமி திருக்கோயிலில் இருந்து பிட்டுத்தோப்பிற்கு எழுந்தருளி பிட்டுத் திருவிழா முடிந்து திரும்ப திருக்கோயிலுக்கு வந்து சேரும் வரை திருக்கோயில் நடைசாத்தப்பட்டு இருக்கும். 17.09.2024, செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூர் அருள்மிகு மாணிக்கவாசகர் சுவாமியும் புறப்பாடாகி திருக்கோயிலின் அலுவலக மண்டகப்படிக்கு எழுந்தருளி தீபாராதனை நடைபெறும்.