திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தலில் பத்தாம் ஆண்டு முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. நேற்று முன்தினம் மூலவர்கள் இடர்நீக்கிய அம்மன், புல்லாணியம்மன், மந்தை மாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பத்து நாட்களும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பாரி நகர்வலம் வந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு பொக்கனாரேந்தலில் இடர் நீக்கிய அம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்து வந்தனர். ஊருணியில் பாரியை கங்கை சேர்த்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பொக்கனாரேந்தல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.