பதிவு செய்த நாள்
22
நவ
2012
10:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சித்திரை வீதி பூந்தோட்டம் பராமரிப்பு, தினமலர் நாளிதழின் செய்தி எதிரொலியாக, கோயில் நிர்வாகத்திடம் மாநகராட்சி ஒப்படைத்தது. இக்கோயில் வெளிப்புறத்தை அழகுபடுத்த, 2008ல் மாநகராட்சி மற்றும் சுற்றுலா துறை சார்பில், சித்திரை வீதிகளில், கோயில் சுற்றுச்சுவரையொட்டி பூந்தோட்டம் அமைக்கப்பட்டது. இரவு, கோபுரத்தை தரிசப்பதுடன், தோட்டங்களையும் ரசிக்க அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டன. இப்பூந்தோட்டத்தை மாநகராட்சி பராமரித்தது. நான்கு மாதங்களாக பூந்தோட்டம் அலங்கார விளக்குகளுக்கான மின்கட்டணத்தை மாநகராட்சி செலுத்தவில்லை. மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால், பூந்தோட்டம் இரவு பொலிவிழந்தது. இதுகுறித்து, செப்.,19ல் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டதுடன், "தோட்டப் பராமரிப்பை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கலாம், என, தெரிவித்தது. இதன் எதிரொலியாக, கோயில் நிர்வாகத்திடம் தோட்ட பராமரிப்பை மாநகராட்சி ஒப்படைத்தது. இதை தொடர்ந்து, ஓராண்டுக்கு இதை பராமரிக்க, தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் உபகோயில்களின் வெளிப்பகுதிகளை தூய்மையாக வைத்திருக்கும் பொறுப்பும் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.கோயில் கடைகளுக்கு உத்தரவுபல மணி நேர மின்வெட்டு உள்ள நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு பாதுகாப்பு கருதி, தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, கோயில் கடை உரிமையாளர்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். இதை கட்டுப்படுத்த, 30 சதவீதம் கட்டாய மின்சேமிப்பில் ஈடுபட வேண்டும் என்றும், மின்சேமிப்பு உடைய விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்றும் உரிமையாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.