பதிவு செய்த நாள்
24
நவ
2012
11:11
திருநெல்வேலி: உலக நன்மைக்காக பாண்டுரெங்கன் பக்தர்கள் கடையநல்லூரில் இருந்து விட்டிலாபுரத்திற்கு பாதயாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த குழுவினருக்கு நெல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடையநல்லூர் விட்டல் விகார் விஸ்வவராகரி சமஸ்தானம் சார்பில் பாண்டுரெங்கன் பக்தர்கள் உலக நன்மைக்காகவும், நாட்டில் சிறப்பாக மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், அமைதி நிலவவும் பாத யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளனர். கடையநல்லூரில் இருந்து கடந்த 18ம் தேதி துகாராம் கணபதி மகராஜ் தலைமையில் பாத யாத்திரை பயணத்தை துவக்கிய குழுவினர், பாத யாத்திரையாக தென்காசி, ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பிரான்சேரி, மேலச்செவல் வழியாக நேற்று நெல்லைக்கு வந்தனர். நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோடு ரிலையன்ஸ் பங்க் அருகில் பாதயாத்திரை குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த குழுவினர் பாளை., தியாகராஜநகர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலுக்கு வருகை தந்தனர். அங்கும் பாத யாத்திரை குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தியாகராஜநகர் சிருங்கேரி சங்கரகேந்திரா தலைவர் டாக்டர் சிவராமகிருஷ்ணன், தர்மாதிகாரி ஆடிட்டர் நடராஜன் ஐயர், ஆடிட்டர் ராமகிருஷ்ணன், காசிவிஸ்வநாதன், ஆஸ்தீக சமாஜம் ராமன், எஸ்.வி.எஸ்.சுப்பிரமணியன் ஐயர், கோபாலகிருஷ்ண வாத்தியார், சிருங்கேரி சாரதா பள்ளி தாளாளர் முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சாரதா மண்டபத்தில் பாண்டுரெங்கன் பக்தர்கள் குழுவினரின் பஜனை நடந்தது. பாதயாத்திரை குழுவினர் விட்டிலாபுரம் பாண்டுரெங்கன் கோயிலுக்கு செல்கின்றனர். தொடர்ந்து நாளை வரை கைசிக ஏகாதசி, துவாதசி நாட்களில் விட்டிலாபுரம் பாண்டுரெங்கன் கோயிலில் சிறப்பு பஜனை மற்றும் பூஜைகள் நடக்கிறது. பாதயாத்திரையில் 20 பெண்கள் உட்பட 60 பேர் பங்கேற்றுள்ளனர். ஏற்பாடுகளை விட்டல் விகார் விஸ்வவராகரி சமஸ்தானம் பாண்டுரெங்கன் பக்தர்கள் குழுவினர் செய்துள்ளனர்.