பதிவு செய்த நாள்
26
நவ
2012
10:11
உடுமலை: சபரிமலை சீசனையொட்டி, திருமூர்த்தி மலைக்கு ஐயப்ப பக்தர்கள் வரத்துவங்கியுள்ளனர். இதனால், அப்பகுதியே "களை கட்டியுள்ளது. ஆண்டுதோறும், சபரி மலைக்கு விரதமிருந்து மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வர் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்தாண்டும், இக்கோவிலுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் வரத்துவங்கியுள்னர். மலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், தற்போது திருமூர்த்தி மலையில் முகாமிட்டு, பஞ்சலிங்க அருவியில் குளித்து, அமணலிங்கேஸ்வரரை தரிசனம் செய்கின்றனர். பின், படகுத்துறையில், படகு சவாரி மேற்கொள்கின்றனர். இவர்களின், வருகையால் திருமூர்த்தி மலை "களை கட்டியுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள்"திருமூர்த்திமலையில், வீண் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் சீருடை பணியாளர்கள் நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள், ஆபத்தான பகுதியாக உள்ள அணைக்கு செல்லும் வழித்தடத்தில் செல்லாமல் இருக்கவும், குளிக்காமல் கண்காணிக்கவும்; கோவில் பின் பகுதியில், ஆற்றின் குறுக்கே செல்லாமல் தடுப்பது, பஞ்சலிங்க அருவியில், வனப்பகுதி மற்றும் ஆபத்தான பகுதியில் இறங்குவதை தடுக்கவும்; கண்காணித்தல் போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுகின்றனர். கோவில் பணியாளர்களும் இவர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன, என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.