பதிவு செய்த நாள்
12
நவ
2024
01:11
காரமடை; பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஏகாதசி வைபவம் நடந்தது.
விழாவை முன்னிட்டு அதிகாலை மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து கால சந்தி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து விஸ்வக்ஷேனர் ஆராதனம் புண்யாவசனம் கலச ஆவாஹனம் ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் ரங்கநாதர் பெருமாள் ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் நெய், தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், வாசனை திரவியங்கள், பன்னீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து செந்நிற பட்டுடுத்தி ரங்கநாதர், வெண்பட்டு குடையுடன், வெள்ளி சப்பரத்தில் கோவில் வலம் வந்தார்.
தொடர்ந்து ஆஸ்தானம் எழுந்தருளிய ரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் அமர்ந்தார். உச்சகால பூஜையை தொடர்ந்து வேதபாராயணம் சாற்றுமறை முடிந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள், மிராசுதாரர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வைபவ ஏற்பாட்டினை அறங்காவலர் குழு தலைவர் எம் கே கே தேவானந்த், மற்றும் அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா, ஜவகர், குணசேகரன், மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் கவிதா கல்யாண சுந்தரம், திருக்கோவில் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்திருந்தனர்.