சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மண் விளக்கு வைத்து பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2024 02:11
காங்கேயம்; திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில், மண் விளக்கு வைத்து சிறப்பு வழிபாடு நடத்த உத்தரவாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. முருக பக்தர்கள் கனவில் சுப்ரமணிய சுவாமி உத்தரவிடும் பொருள் இந்த பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவது நுாற்றாண்டு கால வழக்கமாக உள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை முந்தைய பொருள் பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும். அதன்படி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில், மண் விளக்கு வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார் கூறுகையில், ‘சிவன்மலை உத்தரவு பெட்டியில் எந்த பொருள் வைத்து பூஜை செய்யப்படுகிறதோ, அந்த பொருள் சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். மண் விளக்கு வைக்கப்பட்டுள்ளதால், சமுதாயத்தில் அதன் தாக்கம் போக போக தெரியவரும்’ என்றார்.
பக்தர்கள் கூறுகையில், சிவன்மலை உத்தரவு பெட்டியில் மண் விளக்கு உத்தரவாகியுள்ளதால் சுபிட்சம் ஏற்படும். கார்த்திகை மாதம் பிறக்க உள்ள நிலையில் மண் விளக்கு உத்தரவாகி உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக கூறினர்.