பதிவு செய்த நாள்
21
நவ
2024
11:11
பல்லடம்; அறநிலையத்துறையின் மோசமான செயல்பாடு காரணமாக, பல்லடம் அருகே, முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட கோவில், மீண்டும் முட்பதர்களுக்கே பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
பல்லடத்தை அடுத்த, மாதப்பூர் கிராமத்தில், 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த அனுமந்தராயர் கோவில் உள்ளது. இக்கோவில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் முட்புதர்களுக்குள் மூடப்பட்டு கிடந்தது. தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, கடந்த, 2023 ஏப்., மாதம், முப்புதர்கள் அகற்றப்பட்டு, கோவில் வெளிக்கொண்டுவரப்பட்டது. இதனுடன், முட்புதர்களுக்குள் கிடந்த சில கல் தூண்கள், சிலைகள் உள்ளிட்டவையும் இருப்பது தெரியவந்தது. பழமை வாய்ந்த இக்கோவில், அறநிலையத்துறையின் செயல்பாடின்மை காரணமாகவே, புதர்களின் பிடியில் இருந்துள்ளது. மேலும், இக்கோவிலுக்கு சொந்தமாக, 50 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளதாகவும் கூறப்படும் நிலையில், அறநிலையத்துறை, இது குறித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளது.
தினமலர் செய்தியை தொடர்ந்து, கோவிலை சூழ்ந்திருந்த முட்புதர்களை அகற்றி, கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிய அறநிலையத்துறை அதிகாரிகள், தொல்லியல் துறைக்கு தகவல் அளித்துள்ளதாகவும், விரைவில் புனரமைப்பு செய்யப்படும் என்றும் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்தனர். இதன்பிறகு, வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையும், காற்றில் கரைந்து போன நிலையில், கோவிலைச் சுற்றி மீண்டும் முட்புதர்கள் முளைத்து கோவிலை மூடி மறைத்துள்ளன. முந்தைய காலத்தில் எவ்வாறு புதர்களுக்குள் சிக்கி கோவில் காணாமல் போனதோ, அதே ஒரு சூழலை, தற்போது அறநிலையத்துறை உருவாக்கி வருகிறது. பல ஆண்டு காலமாக மாயமாகிக் கிடந்த கோவில், கண்டுபிடிக்கப்பட்டு, ஒரு ஆண்டு கடந்தும், இன்றுவரை, கோவிலை புனரமைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், மீண்டும் பழைய நிலைக்கே கோவிலை கொண்டு சென்று வரும் அறநிலையத்துறையின் செயல்பாடு, பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது.