கன்னியாகுமரி; கன்னியாகுமரியில் நேற்று ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியா குமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். தற்போது ஐயப்ப சீசன் துவங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் தினமும் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று காலையில் கொட்டும் மழையிலும் ஐயப்ப பக்தர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதிஅம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சூரிய உதய காட்சியை கண்டுகளிக்கும் வகையில் 9 அடுக்கு கொண்ட படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளில் தற்போது வானவில் நிறத்தில் வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. இதனால் படித்துறைபகுதி வானவில் நிறத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் படிக்கட்டுகளில் அமர்ந்து உற்சாகத்துடன் சூரிய உதயத்தைக் காண குவிந்தனர். மழை மேகம் திரண்டிருந்ததால் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் சூரிய உதயம் காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தால் கன்னியாகுமரி கடற்கரை களை கட்டியது. கடைகளில் வியாபாரமும் சூடு பிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.