பதிவு செய்த நாள்
29
நவ
2024
10:11
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோவில். இந்த வளாகத்தில், ஆண்டாள் சன்னிதியும், கோவிலின் எதிரே பக்த ஆஞ்சநேயர் சன்னிதியும் உள்ளது.
கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம், 10 நாட்களும், அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடையாற்றி உற்சவம், மாசி மாதம் தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெறும். இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதியுடன், உபயதாரர்கள் நிதியில் ராஜகோபுரம், அனைத்து விமானங்கள் மற்றும் சன்னிதிகள் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேகம் நடத்த, கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதையடுத்து, 26ம் தேதி காலை 11:00 மணியளவில், புன்யாஹவாசனம், அஹ்டபந்தனம் சமர்ப்பித்தலும், மாலை 5:00 மணிக்கு எஜமானன் அனுக்ஞை, மஹா சங்கல்பம், ஆசார்ய ரித்விக்ரணம், பகவத் பிராத்தனை, அக்னி பிரதிஷ்டை, யாகசாலை பிரவேசம், கும்பாராதனம், வேதபிரபந்த சாற்றுமுறை உள்ளிட்டவை நடைபெற்றன.
நேற்று காலை 7:00 மணிக்கு, புன்யாஹவாசனம், விமான கலசங்கள் நிர்மானித்தல், வாஸ்து ஹோமம், மஹா சாந்தி ஜப்யம், இரண்டாம் கால யக்ஞங்களும், மாலை 5:00 மணிக்கு நவகலசம், சதுர்த்த கலசம், மஹா சாந்தி கலச திருமஞ்சனமும் நடந்தன. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு, அக்னி ப்ரணயனம், கும்பாராதனம், ஸயனாதிவாசம், மூர்த்தி ஹோமம், ததுக்தஹோமம், மூன்று கால யக்ஞங்கள், பூர்ணாஹுதி உள்ளிட்டவை சிறப்பாக நடந்தன. நேற்று காலை 5:00 மணிக்கு விஸ்வரூபம், புன்யாஹவாசனம், அக்னி ப்ரணயனம் விசேஷ ஹோமங்களும், 6:45 மணிக்கு மஹா பூர்ணாஹுதியும், 7:15 மணிக்கு யாத்ரா தானம், மற்றும் கும்பங்கள் புறப்பாடு நடந்தன. தொடர்ந்து, 8:15 மணிக்கு, அனைத்து விமானங்கள் மற்றும் ராஜ கோபுரத்திற்க்கு மஹா ஸம்ரோக் ஷனம் நடந்தது. இதையடுத்து, 8:30க்கு அனைத்து மூர்த்திகளுக்கு மஹா பிரதிஷ்டை மஹா அவிர்நிவேதனமும், 9:00 மணிக்கு பிரம்ம கோஷம், வேத திவ்ய பிரபந்த சாற்றுமுறை நடந்தது. இதில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, 1,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். கூடுவாஞ்சேரி சரக உதவி கமிஷனர் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.