பதிவு செய்த நாள்
23
டிச
2024
12:12
சென்னை திருமழிசையில் வீற்றிருந்த பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள வினய ஆஞ்சநேயரை தரிசித்தால் வெளிநாடு செல்வதில் உள்ள தடங்கல், விசா பிரச்னை தீரும். மகாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக மார்க்கண்டேயர், பிருகு முனிவர் தவம் செய்தனர். ஆனால் அவர்களுக்கு தரிசனம் கிடைக்கவில்லை. அதன்பின் பிரம்மாவின் உதவியை நாடினர். திருமழிசை என்னும் இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்கும் என்றும், மற்ற தலத்தை விட இத்தலம் ஒரு நெல்மணி அதிகம் என்றும் பிரம்மா தெரிவித்தார். அதன்படி முனிவர்கள் தரிசித்த பெருமாளே இங்கு மூலவராக இருக்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இக்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் சன்னதி விசேஷமானது. மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தின் அம்சம் கொண்டவர் இவர். செண்பகவல்லித் தாயார், வினய ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், வேதாந்த தேசிகர் சன்னதிகள் உள்ளன.
திருவள்ளூரில் இருந்து 25 கி.மீ.,
நேரம்: காலை 8:00 - 11.00 மணி, மாலை 4.30 - 8.00 மணி
தொடர்புக்கு: 78719 38201
அருகிலுள்ள தலம்: ஜெகந்நாதப்பெருமாள் கோயில்
நேரம்: காலை 8:00 - 11.00 மணி, மாலை 6.00 - 8.30 மணி
தொடர்புக்கு: 044 – 2681 0542