திருநாங்கூர் 11 கருடசேவை உற்சவம்; தடையின்றி நடத்த மக்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2024 11:12
மயிலாடுதுறை; திருநாங்கூர் 11 கருட சேவை உற்சவத்தை இந்த ஆண்டு தடையின்றி நடத்த வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநாங்கூர், திருமணிக்கூடம், காவாளம்பாடி, பார்த்தன்பள்ளி, கீழச்சாலை, அண்ணன்பெருமாள்கோவில் ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகள் மயிலாடுதுறை கலெக்டர் அளித்த மனுவில் சீர்காழி தாலுகா திருநாங்கூரில் ஆண்டுதோறும் தை அமாவாசை மறுநாள் 11 கருடசேவை உற்பம் நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவத்திற்கு நாங்கூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 11 திவ்யதேச பெருமாள்களும், திருநகரியில் இருந்து திருமங்கை ஆழ்வார் எழுந்தருள விமர்சையாக நடக்கும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். 125 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வரும் கருடசேவை உற்சவம் இந்த ஆண்டு கோயில் திருப்பணியை காரணம்காட்டி தை மாத அமாவாசையின் போது கருடசேவை உற்சவத்தை நடத்தாமல் பிறகு செய்யலாம் என்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் கருடசேவை உற்சவம் நடைபெறும் என்று அனைத்து பக்தர்களும் அறிந்துள்ளதால் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கண்டிப்பாக வந்து ஏமாந்து செல்வார்கள். கடந்த காலங்களில் திருநாங்கூர் பள்ளிகொண்ணட ரங்கநாதபெருமாள் மூலவர் பாலாயத்தில் இருந்தபோதும் பெருமாள் 11 கருடசேவையில் கலந்துகொண்டார். இதேபோல் மணிமாடக்கோயில், அண்ணன்கோயில், பார்த்தன்பள்ளி உள்ளிட்ட கோயில்களில் பாலாயத்தில் இருந்தபோதும் கருடசேவையில் கலந்துகொண்டுள்ளனர். இது குறித்து அறநிலையத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகமமுறைப்படி தடையின்றி இந்த ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் கருடசேவை உற்சவம் நடத்தவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.