பதிவு செய்த நாள்
25
டிச
2024
10:12
சபரிமலை : சபரிமலையில் நாளை(டிச.,26) மண்டல பூஜை நடைபெறுகிறது. தங்க அங்கி இன்று மாலை சன்னிதானம் வந்தடைகிறது. இன்றும், நாளையும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நவ., 16-ல் தொடங்கிய மண்டல கால சீசன் சபரிமலையில் நாளையுடன் நிறைவு பெறுகிறது. நாளை மதியம் மண்டல பூஜை நடைபெறுகிறது. ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி பவனி இன்று மதியம் பம்பை வந்தடைகிறது. மாலை 3:00 மணி வரை பம்பை கணபதி கோயிலில் தரிசனத்திற்காக வைக்கப்படும். அதன் பின்னர் பெட்டகத்தில் அடைக்கப்பட்டு தலை சுமடாக நீலிமலை, அப்பாச்சி மேடு, சரங்குத்தி வழியாக சன்னிதானம் கொண்டுவரப்படுகிறது. அங்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு , மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி பெற்று ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவித்து தீபாராதனை நடத்துவர். நாளை மதியம் 12:00 மணிக்கு களபாபிேஷகத்துக்கு பின் ஐயப்பன் விக்கிரகத்தில் தங்க அங்கி அணிவித்து மண்டல பூஜை நடைபெறும். தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மதியம் 3:00 மணிக்கு திறக்கப்படும் நடை வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 11:00 மணிக்கு அடைக்கப்படும். இதை தொடர்ந்து சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறும். தங்க அங்கி வருகை, மண்டல பூஜையை ஒட்டி பக்தர்களுக்கு இன்றும் நாளையும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று 50 ஆயிரம், நாளை 60 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை இந்த இரண்டு நாட்களிலும் 5 ஆயிரமாக வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மதியம் ஒரு மணிக்கு பின்னர் பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் வர முடியாது. தங்க அங்கி பம்பையில் இருந்து புறப்பட்டு சரங்குத்தி கடந்த பின்னரே பம்பையில் இருந்து பக்தர்கள் வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.