பதிவு செய்த நாள்
31
டிச
2024
05:12
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக மக்களின் நலன் வேண்டி மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கரா தேவி யாக பூஜையை சபையின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.
இதையொட்டி பிரத்யங்கரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. பின்னர் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, திருப்பூர், உடுமலைப்பேட்டை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜையை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். இந்த பூஜையினால் வியாபார வளர்ச்சி, செல்வம் சேர்க்கை, குடும்ப அமைதி, திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம், முன்னோர்கள் வழி பாவம் தீரும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். இதற்கிடையே பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதி அதனை அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர். இதற்கு முன்பாக கோவிலில் உள்ள கோசாலையில் வளர்க்கப்பட்டு வரும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்கப்பட்டு அமாவாசை கோபூஜை நடந்தது. நிறைவாக யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.