பதிவு செய்த நாள்
31
டிச
2024
05:12
திருப்புவனம்; திருப்புவனம் மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பின் போது பணம், நகைகளுடன் அலைபேசிகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை செலுத்த பத்து நிரந்தர உண்டியல்களும், ஒரு கோசாலை உண்டியலும் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படும். நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கணபதிமுருகன்( மடப்புரம்), ஞானசேகரன்(ராமநாதபுரம்), இளங்கோ (இருக்கன்குடி) தலைமையில் தன்னார்வலர்கள் , கோயில் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் ஒரு ஆண்ட்ராய்டு , இரண்டு சாதாரண அலைபேசிகளும், ஒரு வாட்ச்சும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
(பொதுவாக உண்டியல்களில் நேர்த்திகடனாக அலைபேசிகள் செலுத்தப்படுவது இல்லை. நேற்று உண்டியலில் கிடந்த அலைபேசிகள் மிகவும் பழைய மாடலாக உள்ளதால் திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டவையா என விசாரணை நடந்து வருகிறது. ) உண்டியலில் 31 லட்சத்து67 ஆயிரத்து 138 ரூபாயும், பலமாற்று பொன் இனங்கள் 156 கிராமும், வெள்ளி 173 கிராமும் கிடைத்தன. ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.