பதிவு செய்த நாள்
30
நவ
2012
11:11
ஈரோடு: ஈரோடு சின்னமாரியம்மன் கோவிலில், டிசம்பர் 2ம் தேதி நடக்க உள்ள, குண்டம் திருவிழாவுக்கான, விறகு விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், குண்டம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடக்கும். இதில், மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். குண்டம் திருவிழாவின் போது, வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், வேண்டுதல் காணிக்கையாக, குண்டத்துக்கு, பல கிலோ விறகை வழங்குவர். இந்த ஆண்டு சின்னமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, நவம்பர் 20ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 22ம் தேதி கம்பம் நடுதலும், பூவோடு வைத்தலும் நடந்தது. தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், சின்ன மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு, புனித நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். டிசம்பர், 2ம் தேதி சின்ன மாரியம்மன் கோவில், குண்டம் திருவிழா, தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, குண்டம் திருவிழாவுக்கான விறகு விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. இதுகுறித்து விறகு விற்பனையாளர் கூறியதாவது: ஈரோடு கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில், குண்டம் திருவிழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே, விறகு விற்பனை நடப்பது வழக்கம். பத்து கிலோ அடங்கிய, ஒரு மனை விறகு, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப, பக்தர்கள் விறகினை வாங்கி, குண்டம் நடக்கும் இடத்தில் சமர்ப்பிக்கின்றனர். கடந்த ஆண்டை விட, ஒரு மனை விறகுக்கு, பத்து ரூபாய் மட்டும் உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.