பதிவு செய்த நாள்
29
ஜன
2025
01:01
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தர்மசம்வர்த்தினி சமேத ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் பூலோக கைலாயம். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 51 வது தலம். காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். இக்கோவிலில் கடந்த 1937ம் ஆண்டு, 1971ம் ஆண்டு 25 மகா குரு சன்னிதானம் மற்றும் 26வது குருமா சன்னிதானம் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு கடந்த 2013ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் 12 ஆண்டுகள் பிறகு, தருமபுர ஆதீனம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.
இதையடுத்து வரும் பிப்.3ம் தேதி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதையடுத்து நாளை(30ம் தேதி) முதல் யாகசாலை பூஜை துவங்கிறது. தொடர்ந்து எட்டுக்கால பூஜையுடன் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக இன்று திருவையாறு புஷ்ய மண்டப படித்துறை காவேரி ஆற்றில் இருந்து, புனித நீர் எடுக்கப்பட்ட, கலசத்தில், ஐந்து சிவாச்சாரியர்களை கொண்டு வேதங்கள் முழங்க மேல தாளங்களுடன், நான்கு முக்கிய ராஜ வீதிகளை உலா வந்தது. பிறகு, திருக்கோவிலின் ராஜகோபுரம் வழியாக யாக சாலையை அடைந்தது. தீர்த்தங்களை கொண்டுவரப்பட்ட ஐந்து யானைகளையும், சிவாச்சாரியார்களையும் வாத்தியங்கள் முழங்க கோவிலில் வரவேற்றனர். முன்னதாக காவேரி ஆற்றில், அஸ்திரதேவருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேனு போன்ற திரவிய பொடிக்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், தருமபுர ஆதீனம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சொக்கலிங்க தம்பிரான் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.