பதிவு செய்த நாள்
13
பிப்
2025
12:02
பல்லடம்; பல்லடம் பகுதியில் உள்ள பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோவில் பிரதானமானது. இங்கு, சிறிய குன்றின் மீது முருகப்பெருமான் அருள்பாலிப்பதால், கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபடுகின்றனர். தைப்பூசம் மட்டுமின்றி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அடிப்படை வசதிகளோ பின்தங்கியுள்ளன. நுழைவாயிலை அடைந்ததும், கழிப்பிடம் உள்ளது. இதை கடந்து சென்ற பிறகே, கோவிலுக்குள் செல்ல முடியும். அருகே, கோவிலுக்கு சொந்தமான மண்டபமும் உள்ளது.
ஒவ்வொரு விழாக் களின் போதும், கழிப்பிடம் மற்றும் மண்டபத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆகியவை, பக்தர்கள் கோவிலுக்கு வரும் வழித்தடத்தில் தேங்கி நிற்கிறது. தைப்பூச தினமான நேற்று முன்தினமும், இதேபோல் தண்ணீர் தேங்கி நிற்க, வழித்தடம், சேறும் சகதியுமாக மாறியது. இந்த அவலத்துக்கு இடையே, இப்பகுதியில், கூடாரம் அமைத்து அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஒருபுறம், அன்னதானத்துக்காக நிற்கும் பக்தர்கள் மற்றொருபுறம் என, தாறுமாறாக இருந்த வரிசைகளால், பக்தர்கள் அவதிப்பட்டனர். கோவிலை ஒட்டியே, கோவிலுக்கு சொந்தமான இடம் அதிக அளவில் உள்ளது. பார்க்கிங் வசதி உட்பட, கழிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்தலாம். நுழைவு வாயிலில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழித்தடத்தை முறையாக பராமரிக்க வேண்டியதும் அவசியம். நுழைவாயிலில் உள்ள கழிப்பிடத்தை அகற்றி இடமாற்றம் செய்ய வேண்டும். நுழைவாயிலில் இருந்து கோவிலுக்கு வரும் வழித்தடத்தில் ரோடு அமைக்க வேண்டும். விழா காலங்களில், பக்தர்கள் வாகனங்களை நிறுத்த போதிய ‘பார்க்கிங்’ வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை மேம்படுத்த வேண்டும்.