ஆயிரம் ஆண்டுகள் பழமையான கரியமாணிக்கப் பெருமாள்கோயில் வேலூர்மாவட்டம் ஆற்காடு அருகிலுள்ள ஆரூரில் உள்ளது. பத்தாம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்டது. அக்காலத்தில் பெருமாளுக்கு ஸ்ரீகோயில் அஞ்சத்தர விண்ணகர எம்பெருமான் என்று திருநாமம் இட்டிருந்தனர். அஞ்சனம் என்ற சொல்லுக்கு கருமை என்பது பொருள். அதனால், பிற்காலத்தில் கரியமாணிக்கப் பெருமாள் என பெயர் உண்டானது. இப்பகுதி பிரம்மதேயம் என்றும் அழைக்கப்பட்டது. கிழக்குநோக்கி அமர்ந்த கோலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீற்றிருக்கிறார். இரண்டு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திய பெருமாள், ஒன்றின்மூலம் பக்தர்களை அழைத்தும், மற்றொரு கரத்தால் வேண்டிய வரங்களை அருள்பவராகவும் திகழ்கிறார். முற்றிலும் சேதமடைந்த இக்கோயிலில் அழகான 16கால் மண்டபம் இருந்துள்ளது. இங்குள்ள கல்விளக்குத் தூணின் அடியில் ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் சிற்பங்கள் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயில் கி.பி., 941 வரை முதலாம் பராந்தகச் சோழனின் மேற்பார்வையில் இருந்தது. இந்த மன்னனே கோயிலுக்கு நிலம் வழங்கி, அதில் விளைந்த நெல்லை கோயில் பணியாளர், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு வழங்கியதாக வரலாறு தெரிவிக்கிறது. வேதம் ஓதி பூஜை நடத்திய அந்தணர்கள் பொற்காசும் பெற்றனர். பெரிய அக்ரஹாரம் ஒன்றும் கோயிலைச் சுற்றி இருந்துள்ளது. இன்று வரை முறையாக வழிபாடு நடக்கிறது. சிதிலமடைந்த இக்கோயில் தற்போது திருப்பணிக்காக காத்திருக்கிறது. ஆற்காடு- செய்யார் ரோட்டில் ஆரூர் கிராமம் உள்ளது.