பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
04:04
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு தேருக்கு ஆயக்கால் முகூர்த்த பூஜை நடைபெற்றது.
கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையானதும், ஆசியாவில் மூன்றாவது தேர் என்ற பெருமை கொண்டதுமான அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரைத் தேர் விழா தொடங்குகிறது. அதனை முன்னிட்டு இன்று தேர் அலங்காரப் பணிக்காக ஆயக்கால் முகூர்த்த பூஜை பெரிய தேர் மற்றும் அம்மன் தேர் ஆகியவற்றுக்கு நடைபெற்றது. இதனையடுத்து, பாளைக்குச்சி தேரில் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார் கூறும் போது; சித்திரைத் தேர் திருவிழா மே 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சியும், 2ம் தேதி மாலை சூரிய சந்திர மண்டல காட்சி, 3ம் தேதி அதிகார நந்தி, கிளி,பூதம்,அன்னபட்சி வாகன காட்சிகள், 4ம் தேதி கைலாச வாகனம் புஷ்ப பல்லாக்கு ஆகியவை நடைபெறுகிறது. 5ம் தேதி இரவு முக்கிய நிகழ்ச்சியான 63 நாயன்மார்களுக்கு பஞ்ச மூர்த்திகள் காட்சியளித்தல் மற்றும் புறப்பாடு, 6ம் தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாண உற்சவம்,யானை வாகன காட்சி ஆகியவை நடைபெறுகிறது. மே 7ம் தேதி பஞ்ச மூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல், 8ம் தேதி காலை பெரிய தேர் வடம் பிடித்து இழுத்து வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 9ம் தேதி திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10ம் தேதி காலை அம்மன் தேர்,சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர்,கரி வரதராஜ பெருமாள் ஆகிய திருத்தேர்கள் வடம் பிடித்தல் மற்றும் மாலையில் வண்டித்தாரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 11ம் தேதி பரிவேட்டை, 12ம் தேதி இரவு தெப்பத்தேர் உற்சவம்,13ம் தேதி நடராஜப் பெருமான் தரிசனம், 14ம் தேதி மஞ்சள் நீர் மயில் வாகன காட்சியுடன் தேர் திருவிழா நிறைவுபெறுகிறது. தேரை முதலில் ஏர் கம்ப்ரசர் கொண்டு வாகன போக்குவரத்தால் ஒட்டி இருக்கும் மண், தூசுகள் ஆகியவற்றை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் தேரை அலங்கரிக்கும் பணிகள் தொடங்கும். பக்தர்களுக்கான அனைத்து வித பாதுகாப்பு ஏற்பாடுகளும், அடிப்படை வசதிகளும் நிறைவாக விழாவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார். தேர் ஆயக்கால் முகூர்த்த பூஜையில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், கவிதா மணி மற்றும் சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.