பதிவு செய்த நாள்
30
ஏப்
2025
12:04
அவிநாசி; அவிநாசி ஸ்ரீகருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா,மூன்றாம் நாளில் புருஷாமிருக வாகன காட்சி ஊர்வலம் நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நாளை சித்திரைத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை முன்னிட்டு மூன்றாம் நாள் வைபவத்தில் புருஷாமிருக வாகன காட்சியில், ஸ்ரீ சந்திரசேகரர் ஸ்ரீஆனந்தவல்லி எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்து அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மிகச்சிறப்பு வாய்ந்த தளங்களான சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் 4ம் நாளில் வெள்ளி கவசத்திலும், திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் 9ம் நாளிலும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் 3ம் நாளிலும் சுவாமி திருவிதி உலாவின் நிகழ்ச்சியில் புருஷாமிருக வாகனம் பயன்பாட்டில் உள்ளது. தற்போது அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவிற்கு கார்காத்த வேளாளர் சமூகம்,அனைத்து பிள்ளைமார் சமூகம் மற்றும் வ.உ.சி சமூக நல அறக்கட்டளை ஆகியோர் இணைந்து,புருஷாமிருக வாகனத்தை சுவாமி திருவீதி உலா பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளனர். மனித தலை உருவமும், ஞானி போன்ற தோற்றத்துடன் இடை வரை மனித உடலும், மீதம் சிங்க உடலும் கொண்டதாக இருக்கும். முதுகில் பறவையின் இறகுகளை கொண்டதாக தோற்றம் அளிக்கும் புருஷாமிருக வாகனம் சிவஸ்தலங்களில் திருவிழாக்களின் போது உற்சவமூர்த்தி எழுந்தருளி திருவீதி உலா வர பயன்படுத்துகின்றனர்.