தீயில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு, தண்ணீரை சுர்ர்ன்னு அப்படியே உறிஞ்சி இழுத்து விடும். அதுபோல, ஜீவாத்மாவான தன்னை பரமாத்மாவான விஷ்ணு, உள்வாங்கிவிட்டார் என்கிறார் நம்மாழ்வார். தீர இரும்பு உண்ட நீரதுபோல என் ஆருயிரை ஆரப்பருக எனக்கு ஆராவமுதானாயே என்று திருவாய்மொழி பாசுரத்தில் பாடியுள்ளார். இதே பொருளில், மாணிக்கவாசகர், தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னை சங்கரா ஆர்கொலோ சதுரர்? என்று சிவனிடம் கேள்வி கேட்கிறார். சங்கரனே! நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேரம் பேசிக் கொண்டோம். அல்பமான என்னை நீ எடுத்துக் கொண்டாய். ஆனந்தவடிவான உன்னை எனக்கு அளித்து விட்டாய். யார் இதில் கெட்டிக்காரர் என்று நீயே சொல்லு, என்று சிவனைக் கேட்கிறார். மனித நிலை கடந்து தானும் சிவமானதை மாணிக்கவாசகர் இவ்வாறு கூறுகிறார்.