பதிவு செய்த நாள்
11
மே
2025
11:05
கோவை; கோவையில் பழமை வாய்ந்த, கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா, 32 ஆண்டுகளுக்கு பின், விமரிசையாக நடந்தது.
கோவை பெரியகடை வீதியையொட்டி, கோட்டை மேட்டில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தைப்பூசம் மற்றும் சித்திரை திருவிழா காலங்களில், தேரோட்டம் நடத்தப்படும். ஆனால் 32 ஆண்டுகளாக, சித்திரைத்திருவிழா தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. பக்தர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், சித்திரைத்தேரோட்டம் நடத்த, கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, நேற்று தேர்த்திருவிழா பக்தர்கள் சூழ, விமரிசையாக நேற்று நடந்தது. கடந்த மே 4ல் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. நேற்று சங்கமேஸ்வர சுவாமி, அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் எழுந்தருளுவிக்கப்பட்டார். பக்தர்களின் ‘ஓம் நமச்சிவாயா’ கோஷங்கள் முழங்க, காலை 11:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் வைபவம் நடந்தது. இதில் பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதினம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், ஜமாப் வாத்தியங்கள் முழங்க, தேர் வடம் பிடித்து இழுத்தனர். கோவிலிலிருந்து தேர் புறப்பட்டு, கோட்டை கரிவரதராஜ பெருமாள் கோவில் வழியாக ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி வழியாக மீண்டும் கோவிலை அடைந்தது. கொளுத்தும் வெயிலுக்கு, வழிநெடுக லாரிகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு நீர்மோர், இளநீர், சர்பத் ஆகியவற்றை இஸ்லாமியர்கள் வழங்கி, மதநல்லிணக்கம் போற்றினர்.