Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேரையர் திருமூலர் திருமூலர்
முதல் பக்கம் » 18 சித்தர்கள்
இடைக்காடர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2011
03:02

நவக்கிரகங்களில் குருவைத் தவிர அனைவரும் பதறிப் போனார்கள். நாம் சரியான இடத்தில் தானே நேற்றிரவு படுத்திருந்தோம், இன்று இடம் மாறியிருக்கிறோம். எப்படி இது நிகழ்ந்தது? நமது மாறுபாட்டான நிலையால், கொடும் பஞ்சம் சம்பவிக்க வேண்டிய ஒரு மாமாங்க காலத்தின் நடுப்பகுதியிலேயே, மழை கொட்டிக் கொண்டிருக்கிறதே! இனி நாம் முந்தைய நிலையை அடைந்தாலும், மழை நிற்குமா? என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.குரு சிரித்தார்.கிரகங்களே! நீங்கள் பேசுவது நகைப்புக்குரியதாய் இருக்கிறது. நாம் ஒருமுறை இடம் மாறி விட்டால், குறிப்பிட்ட காலம் வரை அதே இடத்தில் தான் சஞ்சரிக்க முடியும் என்ற விதியைக் கூட மறந்து விட்டீர்களா? விதியை மதியால் வெல்லலாம் என்பது இதுதான்! இந்த விளையாட்டுக்கு காரணமானவர் யார் தெரியுமா? இடைக்காடர்... ஆம்... நேற்று வரை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அவர், இன்று மாபெரும் சித்தர். சிவனருள் பெற்றவர். அவரது மதி பலம் மட்டுமல்ல... நமக்கெல்லாம் படியளக்கும் சிவபெருமான் மீது அவர் கொண்டிருக்கும் பக்தியும் இதற் கொரு காரணம், என்றதும், ஆ... என வாயைப் பிளந்த கிரகங்கள், ஆடு மேய்த் தவர் சித்தரானது எப்படி? குருதேவா! எங்களுக்கு விளக்கியருள வேண்டும்? என்றனர். குரு இடைக்காடரின் வரலாறை விவரித்தார். இடைக்காடர், காஞ்சிபுரம் அருகிலுள்ள இடையன் மேட்டைச் சேர்ந்தவர் என்று ஒரு சாராரும், சிவகங்கை அருகிலுள்ள இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். எப்படியிருப்பினும், ஊரின் பெயரே இவருக்கு நிலைத்திருக்கிறது. இவரது தந்தை நந்தக்கோனார், தாய் யசோதா. இந்தப் பெயர் களைக் கொண்டு, இவரைப்பெருமாளின் ஒரு அம்சம் என்று கூறுபவர்களும் உண்டு.

Default Image

Next News

கண்ணன் பசுக்களை மேய்த்தார், இவரே ஆடுகளை மேய்த்தார். கல்வியறிவு அறவே இல்லை. இந்த ஆடுகள் அங்குமிங்கும் பாய்கின்றனவே! தனக்கு வரும் ஆபத்தை உணராமல் குறுக்கும் நெடுக்குமாக ஓடி, முன்னால் செல்ல துடிக்கின்றனவே! இவற்றின் மந்தபுத்தியால், இவை தனக்கும், பிறருக்கும் சிரமத்தைத் தருகின்றனவே! ஓ...ஆண்டவனே! இந்த ஆடுகளின் ஸ்பாவத்தைப் போலவே தானே, உன்னைப் போன்ற மனிதர் களின் ஸ்பாவமும் இருக்கிறது என்பதைப் புரிய வைக்கிறாயோ! மனிதன் கடவுளுக்கு பயப்படவா செய்கிறான்? ஆடுகளைப் போல குறுக்கு வழியில் முன்னேறத்தானே நினைக்கிறான்! இந்த ஆடுகளை நான் நல்வழிப்படுத்தி, அவரவர் வீட்டில் ஒப்படைப்பது போல, மனித ஜீவன்களையும் ஒழுங்குபடுத்தி, உன்னிடம் ஒப்படைக்கத்தான் எனக்கு இந்தப் பிறவியைத் தந்துள்ளாயோ! படிப்பில்லாவிட்டாலும் கூட, இடைக்காடரின் மனதில் ஆழ்ந்த ஞானத்தைத் தரும் இந்தக் கேள்வி எழும்பியதும், இதற்கு விடை தேடி அலைந்தார். ஆடுகளை ஓரிடத்தில் மேயவிட்டு, கோலை ஊன்றி, ஒற்றைக்காலை உயர்த்தி, தவ நிலையில் இருப்பார். சிவபெருமானே! என் கேள்விக்கு விடை வேண்டும், இந்த சமூகத்தை நான் ஒழுங்குபடுத்த வேண்டும். கல்வி எனக்கில்லை, யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள அது அவசியமும் இல்லை. எனக்கு, மனித வாழ்வின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தியைக் கொடு, இந்த சமுதாயத்தை ஒழுங்குபடுத்தும் உபாயத்தைச் சொல்,.... இப்படி அன்றையப் பொழுது முழுவதும் பல மாதங்களாக தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ஒருநாள், அவர் முன்னால் அதிபயங்கர மின்னல் போன்ற பிரகாசமான ஒளி வீசியது. அது இடைக்காடரின் உடலில் பாய்ந்தது. இடைக் காடருக்கு ஏதோ தனக்குள் மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அப்போது அசரீரி ஒலித்தது. சேவை... சேவை... சேவை... இதுவே மனிதன் என்னை அடைவதற்கான வழி...பிறருக்கு சேவை செய். அதற்குரிய உபாயத்தைக் காண். மகனே! இதோ, ஞானநூல்கள் அனைத்தையும் கற்ற பெருமைக்குரியவர்களின் வரிசையில் உன்னையும் சேர்க்கிறேன்.
நீ இன்று முதல் பெரிய மகான். சாதாரண இடைக்காடன் அல்ல... இடைக்காட்டு சித்தன்... இடைக்காட்டு சித்தன்... ஒலி நின்றுவிட்டது. சிவனருளால் இடைக்காடர் இப்படி சகல ஞானமும் பெற்றதும், அவரால் நினைத்ததை எல்லாம் செய்ய முடிந்தது. ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது, கொடிய பஞ்சம் வரப்போவதை அறிந்தார். அந்த பஞ்சம் 12 ஆண்டுகள் நீடிக்கும் என்பதைக் கணித்தார்.ஆஹா...நதிகள் வற்றப்போகின்றன. ஊற்று தோண்டினால் கூட தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் இல்லாவிட்டால் உலகமேது. இந்தப் பஞ்சத்தால் பல உயிர்கள் அழிவது உறுதியாகி விட்டது. நானும் அதில் ஒருவனாகத்தானே இருப்பேன்! ஒருவேளை நான் உயிர் பிழைத்தேன் என்றால், ஏதாவது செய்து இந்த மக்களுக்கு நல்வழி பிறக்கச் செய்யலாம். இறைவனின் கட்டளையை மாற்ற என்னால் முடியாது. ஆனாலும், மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும் கஷ்டம் வரும் நேரத்தில் தானே சேவை செய்யச் சொல்லி இறைவன் நமக்கு கட்டளையிட்டிருக்கிறான். அந்த சேவையைச் செய்ய எனக்கு உயிர் தேவை... இந்த சிந்தனையுடன், அவரது மூளை வேகமாக வேலை செய்தது. தன் ஆடுகளுக்கு எருக்க இலைகளை பறித்துப் போட்டார். கேழ்வரகு (கேப்பை) எனப்படும் தானியத்தை மண்ணுடன் சேர்த்து குழைத்து, ஒரு குடிசை கட்டினார். ஊர்மக்கள் இவரது செய்கையை வித்தியாசமாகப் பார்த்தனர். இடைக்காடனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. எவனாவது விஷத் தன்மையுள்ள எருக்க இலைகளை ஆடுகளுக்கு பறித்துப் போடுவானா? மேலும், கேழ்வரகைக் குழைத்து வீடு கட்டுவானா? என்று பேசிக் கொண்டாலும், இடைக்காடர் ஏன் இப்படி செய்கிறார் என்ற சந்தேகமும் ஏற்பட்டது. தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள, அவர்கள் இடைக் காடரிடம் விளக்கம் கேட்டனர். கொடிய பஞ்சம் வரப்போகிறது. பஞ்சகாலத்தில், பச்சிலைகளுக்கு எங்கே போவது? எனவே, ஆடுகளுக்கு கடும் கோடையிலும் காயாத எருக்க இலைகளை சாப்பிட பழக்குகிறேன், என்றதும், ஊரே சிரித்தது.
மக்கள் தன் பேச்சை நம்பாவிட்டாலும், ஏளனமும் செய்கிறார்களே... ஐயோ! இவர்களையும் பஞ்சத்தில் இருந்து காப்பாற்றலாம் என நினைத்தால், இவர்கள் தன்னை நம்பாமல் இருக்கும் போது என்ன செய்ய முடியும்? அவர்களின் விதி அவ்வளவு தான் என்று நொந்து கொண்டார் இடைக்காடர். என்ன ஆச்சரியம்! அவர் சொன்னது போலவே, சில மாதங்களில் வறட்சி துவங்கியது. கொஞ்சநாள் இப்படி இருக்கும்... அப்புறம் சரியாய் போய்விடும் என மக்கள் நினைத்தனர். உஹூம்... மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லை. ஒரு வருடம், இரண்டு வருடம் என காலம் நீடித்தது. பயிர் பச்சைகள் அழிந்தன. ஒரு சாரார் பட்டினியால் மடிந்தனர். கால்நடைகள் மெலிந்து நூலாகி விட்டன. இடைக்காடர் வளர்த்த ஆடுகள் மட்டும் எருக்க இலையைச் சாப்பிட பழகியிருந்ததால், உயிர் பிழைத்துக் கொண்டன. ஆனால், அந்த இலையைச் சாப்பிட்டதால் ஏற்பட்ட அரிப்பு தாங்காமல், இடைக்காடர் கேழ்வரகைக் குழைத்துக் கட்டிய குடிசையில் உரசின. அப்போது, கேழ்வரகு கீழே சிந்தியது. அதைக் கொண்டு கூழ் காய்ச்சி சாப்பிட்டுக் கொண்டார் இடைக்காடர். தண்ணீர் பற்றாக்குறை இருந்ததால், தான் குடியிருந்த இடத்தின் அருகில் இருந்த ஆற்றில், ஒரு ஆழமான பகுதியில் ஊற்று தோண்டி வைத்துக் கொண்டார். கிடைக்கிற தண்ணீரைச் சிக்கனமாக வைத்துக் கொண்டார். இந்த சமயத்தில், வானுலகில் இருந்து நவக்கிரகங்கள் பூலோகத்தில் தாங்கள் ஏற்படுத்திய வறட்சி நிலை சரியாக இருக்கிறதா? மக்கள் எந்தளவுக்கு சிரமப்படுகிறார்கள்? பாவம் செய்த மக்களுக்கு, சரியான தண்டனை வழங்கும்படி, இறைவன் இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு தாங்கள் செய்த செயல்கள் ஒழுங் காக நடைபெறுகின்றனவா? என்று ஆய்வு செய்தனர். ஓரிடத்தில் இடைக்காடர் திவ்யமாக கேப்பைக்கூழ் காய்ச்சுவது கண்டும், ஆடுகள் எவ்வித சிரமமும் இல்லாமல் உலாவுவது கண்டும் ஆச்சரியப்பட்ட அவர்கள், கிரகச் சூழ்நிலைகளை சமயோசிதத்தால் வெற்றி கொண்ட சித்தருக்கு மரியாதை தெரிவிக்கும் பொருட்டு அவரது குடிசைக்கு வந்தனர்.
அவர்களை வரவேற்றார் இடைக்காடர். அவர்களைக் கண்டதுமே, ஐந்தாறு ஆண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் பஞ்சம், இன்னும் ஆறு ஆண்டுகள் தொடர்ந்தால் என்னாகும்? பூலோக வாழ்வே ஸ்தம்பித்துப் போகுமே! இருக்கிற மக்களையாவது காப்பாற்றியாக வேண்டுமே! அவர் மூளை வேகமாக வேலை செய்தது. கிரகங்களே! நீங்கள் அனைவரும் இன்றிரவு என் குடிசையில் தங்க வேண்டும். இதுவே நீங்கள் என் மீது கொண்ட அன்பின் அடையாளத்தை வெளிக்காட்டுவதாக அமையும், என்றார் இடைக்காடர்.சித்தரை மீறிச் சென்றால், அவரை அவமதித்தது போலாகும். மேலும், அடியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால், இறைவனின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும் என பயந்த கிரகங்கள், அதற்கு சம்மதித்தனர். இடைக்காடர் அவர்களுக்கு ஆட்டுப்பாலும், கேப்பைக் கூழும் தந்தார். அவற்றைப் பருகிய கிரகங்கள், உண்ட மயக்கத்தில் களைத்து படுத்து விட்டனர். நள்ளிரவில் அயர்ந்து உறங்கிய அவர்களை, தன் சக்தியால் எழ விடாமல் செய்த இடைக்காடர், அவர்களை தூக்கி, மழை பெய்வதற்கு எந்த கிரகநிலை இருந்தால் சரியாக இருக்குமோ, அதற்கேற்ப படுக்க வைத்து விட்டார். அவ்வளவு தான்! மழை கொட்ட ஆரம்பித்து விட்டது. காலையில் எழுந்த கிரகங்கள், அனல்காற்றுக்கு பதிலாக குளிர்க்காற்று வீசுவதையும், விடிய விடிய பெய்த பெரும் மழையில், ஆற்றில் தண்ணீர் பெருகி ஓடுவதையும் கண்டனர். தங்களை மாற்றி வைத்தது இடைக்காடராகத்தான் இருக்கும் என நம்பிய அவர்கள் அவரைத் தேடினர். அவரோ ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இவரை இப்போதைக்கு எழுப்ப முடியாது என உணர்ந்து கொண்ட நவக்கிரகங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பி விட்டனர்.இந்த சம்பவத்தை அறிந்த மக்கள், இடைக்காடரை நோக்கி வந்தனர். தங்களைக் காப்பாற்றியமைக்காக நன்றி கூறினர். இடைக்காடர் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.முன்பொரு முறை தன்னை நம்பாத மக்கள், இப்போது நம்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இவர்கள் நேரத்திற்கு நேரம் தங்கள் நடைமுறையையும், பேச்சையும் மாற்றுபவர்களாக அல்லவா இருக்கிறார்கள்? என்று எண்ணியே வருத்தப்பட்டார்.
இருப்பினும் அவர் மக்களுக்காக இறுதிவரை சேவையே செய்தார். ஒருமுறை, மதுரை வந்த இடைக்காடர், அன்றைய மன்னன் குலசேகரப் பாண்டியனைச் சந்தித்தார். இவரது ஏழ்மையான தோற்றம் கண்ட மன்னன். இவரைக் கண்டுகொள்ளவே இல்லை.நாடாளும் மன்னன் ஏழைகளை அவமதிக்கிறான். ஏ சுந்தரேசா! நீ இவ்வளவு பெரிய கோயிலில் இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாயா? என்று இறைவனைக் கடிந்து கொண்டார்.அதுகேட்டு மீனாட்சியம்மன் கோயிலில் இருந்த சுந்தரேஸ்வரர், அவருடன் கிளம்பி விட்டார். அவர்கள் கோயிலில் இருந்து சற்று தள்ளியுள்ள சிம்மக்கல் என்ற இடத்தில் தங்கினர். தற்போது அவ்விடத்திலுள்ள ஆதிசொக்கநாதர் கோயிலில் இடைக்காடருக்கும் சன்னதி இருக்கிறது. பின்னர் மன்னன் மன்னிப்பு கேட்டு, சுந்தரேஸ் வரரை மீண்டும் கோயிலுக்கு அழைத்து வந்தானாம்.இவர் திருவண்ணாமலைக்கும் சென்றிருக்கிறார். அங்கு கிரிவலம் வந்த அவர், கோடி யுகங்களுக்கு முன்புள்ள கார்த்திகை தீபக்காட்சிகளைக் கூட தரிசித்தார். இவர் இங்கு வந்த பிறகு தான் அண்ணாமலையில் வசித்த மான்களும், சிங்கங்களும் அங்கிருந்த தடாகங்களில் ஒன்றாகத் தண்ணீர் குடித்ததாம். இப்படி மக்களின் பஞ்சம் போக்க தன்னையே ஈந்த இடைக்காடர், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரிலேயே சமாதியானார். ஒருசாரார், அவர் திருவிடைமருதூரில் (தஞ்சாவூர் மாவட்டம்) சமாதியானதாகவும், திருவண்ணாமலையில் சமாதியடைந்ததாகவும், ஜனன சாகரத்தில் சமாதியடைந்தாரென்றும் சொல்கிறார்கள்.
நவக்கிரக நாயகன் இடைக்காட்டூர் சித்தர்: சித்தர்கள் என்பவர் சிவத்தை கண்டவர்கள் சுத்த, அசுத்த மாயைகளால் தீண்டப் பட்டாலும், எதனாலும் கரைபடாமல் முக்தி அடைந்தவர்கள் எனப் போற்றப்பட்டனர்.
சித்தர்கள் யார் ?: அகத்திய மகரிஷியின் கூற்றுப்படி சித்தன் என்பவன், மூலமதை யறிந்தக்கால் யோகமச்சு முறைமையுடன் கண்டக்கால் வாத மச்சு சாலமுடன் கண்டவர் முன் வசியமாய் நிற்பார் சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன்.
நூல் - அகத்தியர் பரிபாஷை: தமிழ்நாட்டில் வாழ்ந்த பல கோடி சித்தர்களில் பதினெட்டு சித்தர்கள் மிக முக்கியமாக போற்றப்படுகின்றனர். அதில் இடைக்காட்டுச் சித்தர் மிகக் குறிப்பிடத்தக்கவர். ஏனென்றால் அவர் அகத்திய மகரிஷியை மகா சித்தர் என்றும் பெரும் சித்தர் என்றும் அவருடைய குரு போக மகரிஷியால் அழைக்கப்பட்டார். ஏனெனில் ஏனைய சித்தர்கள் கலியுகத்தில் மனிதன் படும் துன்பங்கள் நீங்க வழிகளை அறிந்து அதற்குரிய வழிமுறைகளை கூறினார்கள். ஆனால் இடைக்காட்டூர் சித்தர் மட்டும் உலக ஜீவன்கள் அனைத்தும் உய்ய வழிமுறைகள் கண்டறிந்து உபாயம் கூறினார்.
இடைக்காடர் வாழ்க்கை - அவதாரம் தலம்: இடைக்காடர் தொண்டை மண்டலத்தில் இடையன் திட்டு என்னும் ஊரில் இடையர் குலத்தில் நந்த கோனார் மற்றும் யசோதா தம்பதியினர்க்கு மகனாக பிறந்தார். இந்த ஊரானது தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடையன் மேடு என்று அழைக்கப்படுகிறது. இடைக்காடரின் பிறப்பைப் பற்றி போகர் மகரிஷி தனது சிஷ்யர் புலிப்பாணி சித்தரிடம் பாடிய பாடல்.
மட்டான இடைக்காடர் ஜாதி பேதம்
மகத்தான கோனாரே என்னலாகும்
திட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும்
திகழான நூலதனில் கண்ட மட்டும்
காலமுடன் இடைக்காடர் பிறந்த நேர்மை
சட்டமுடன் சொல்லுகிறேன் தன்மை பாரே
தன்மையாம் புரட்டாசி மாதமப்பா
தாழ்வாக இரணியனைக் கொன்ற
வன்மையாம் திருவாதிரை இரண்டாம் காலம்
வளப்பமுடன் அவதரித்த சிசுபாலன் தானே
- போக முனிவர் 7000 நூல்
முக்திஸ்தலம் : இடைக்காடர் சித்தர் திருவண்ணாமலையில் ஜீவசமாதி நிலை அடைந்தார்.
ஆன்மீக பணி : சிவகங்கை மாவட்டத்திலுள்ள இடைக்காட்டூரில் சித்தரின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை அன்று அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரன்று சித்தருக்கு குரு பூஜையும் மாபெரும் அன்னதானமும் சீரும் சிறப்பாக ஸ்ரீ இடைக்காடர் சித்தர் ஞான புண்ணிய ஷேத்திரம் மூலம் நடைபெறுகிறது.
இருப்பிடம் : மதுரை டூ பரமக்குடி சாலையில் முத்தணேந்தல் என்ற ஊரின் அருகே உள்ளது. (மதுரையிலிருந்து 39 கிலோ மீட்டர்)
வழித்தடம் : மதுரையில் பெரியார் நிலையம் டூ இடைக்காட்டூர். பேருந்து எண் : 99 எப்
குரு வணக்கம்
ஆதியாம் சப்தரிஷி மார்களோடு அருள் பூண்ட
பதினென்பேர் பாதம் போற்றி!
சேதியாம் மூத்ததொரு முனிவர் மூதோர்
செப்பரிய பெரியோர்கள் சுகந்தாள் போற்றி!
நீதியாம் ரவியோடு மதியும் தேவர் நிலையான
மூவருடன் இணைகள் போற்றி!
ஜோதியென சென்னிமீது உரையும் கலைகள்
ஓதுவித்த குருவடிகள் போற்றி! போற்றி!
ஸ்ரீ இடைக்காடர் சித்தர் தியானச் செய்யுள் :
ஆயனராய் அவதரித்து ஆண்டியாய் உருத்தரித்து
அபலைக்களுக்கருளிய கோனார் பெருமானே!
ஓடுகின்ற கிரகங்களை கோடு போட்டு படுக்க வைத்த
பரந்தாமனின் அவதாரமே! மண்சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே!
பாடல் : மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே - முக்தி
வாய்த்தது என்று எண்ணோடா தாண்டவக்கோனே
விளக்கம் : கட்டுக்கடங்காமல் இருக்கும் மனம் என்ற மாட்டை கட்டுப்படுத்தி விட்டால் முக்தி கிடைக்கும் என அறிவுறுத்துகிறார்.
பாடல் : சினம் என்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே - யாவும்
சித்தி என்றே நினையேடா தாண்டவக்கோனே
விளக்கம் : கோபம், வெகுளி, ஆத்திரம் என்று சொல்லப்படும் நச்சும்பாம்பை அடக்கி உள்ளத்திலிருந்து விரட்டி அடித்து விட்டால் சித்தி கிடைக்கும்.
பாடல் : தேவன் உதவியின்றி பசுவே! தேர்ந்திடில் வேறொன்றில்லை
ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே
விளக்கம் : உயிரே ! பரம்பொருளின் துணையின்றி நீ வாழ்ந்து காட்ட முடியாது. உயிருக்கு உயிராய் இருப்பது பரம்பொருளின் அருள்தான் என்பதை மறவாதே!
நூல்:
வருடாதி நூல்கள்
மருத்துவ நூல்கள்
தத்துவப் பாடல்கள்
தியானச் செய்யுள்:
ஆயனராய் அவதரித்து
ஆண்டியார் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற கிரஹங்களை கோடு
போட்டு படுக்க வைத்த பரந்தாமனின் அவதாரமே!
மண்சிறக்க விண்சிறக்க கடைக்கண்
திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே!
பதினாறு போற்றிகள்
1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி!
2. கருணாமூர்த்தியே போற்றி!
3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி!
4. இளநீர் பிரியரே போற்றி!
5. உலகரட்சகரே போற்றி!
6. அபயவரதம் உடையவரே போற்றி!
7. மருந்தின் உருவமானவரே போற்றி!
8. பூலோகச் சூரியனே போற்றி!
9. ஒளிமயமானவரே போற்றி!
10. கருவை காப்பவரே போற்றி!
11. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி
13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி!
14. அங்குசத்தை உடையவரே போற்றி!
15. தேவலீலை பிரியரே போற்றி!
16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டுச் சித்தர் சுவாமியே போற்றி போற்றி!
இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி! என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். அதன்பின் நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ண வஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூஜை செய்ய உகந்த நாள் புதன்கிழமை.
இடைக்காடர் சித்தரின் பூஜை முறைகள்: தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண் மூடி மனமுருகக் கூறி இங்குள்ள பதினாறு போற்றிகளைக் கூற தென்னம்பூ, மல்லிகைப் பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
இடைக்காடர் சித்தரின் காரியசித்தி பூஜா பலன்கள்
இவர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர் இவரை முறைப்படி வழிபட்டால்....
1. ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் ஏற்படும்
2. கல்வியில் தடை, சரியாக படிக்க முடியாத நிலை அகலும்.
3. வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனைகள் நீங்கி வளம் பெருகும்
4. கற்பனைத் திறன், கவித்திறன் கூடும்
5. அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும்
6. புத்திசாலித்தனம் அதிகரிக்கும்
7. பிள்ளை இல்லாதவர்களுக்குப் பிள்ளை வரம் கிட்டும்
8. கல்விக்கூடங்களுக்கு உண்டான பிரச்சனைகள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அகலும்
9. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்
நவகிரகங்களின் வரிசை மாற்றிய இடைக்காடர்!
தமிழின் புகழ்பெற்ற பதினெண் சித்தர்களில் ஒருவர் இடைக்காடர், திருமாலின் அவதாரமாகவே பலராலும் கருதப்படுவர். அக்கினித் தலமான திருவண்ணாமலையில் இடைக்காடர் வழிபாடுசெய்து கொண்டாடப்படுகிறார். இடைக்காடர் நிகழ்த்திய சாதனைகளில் இரண்டை பிரதானமாகச் சொல்வதுண்டு. ஒன்று, காயகல்ப உத்திகளை அவர்தான் கண்டுபிடித்தார். அவற்றை அனுசரிப்பதன் மூலம் என்றும் இளமையுடன் வாழலாம். இன்னொன்று, கோயில்களிலுள்ள நவகிரகங்களின் வரிசைமுறை ஒன்றுடன் ஒன்று பாராமல் நவகிரகங்களை அவ்விதத்தில் வரிசைப்படுத்தியவர் இடைக்காடர்தான். முன்னர் அவ்விதம் நவகிரகங்கள் இருக்கவில்லை. ஒன்றை ஒன்று பார்த்தவாறுதான் இருந்தன, அதனால் பலவகையான பஞ்சங்கள் நாட்டில் நேர்ந்தன. இடைக்காடர் எவ்விதம் அவற்றை வேறுவகையாக ஒன்றுடன் ஒன்று பாராதபடி வரிசைப்படுத்தினார் என்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப்படுகிறது. இடைக்காடர் வாழ்வுடன் கலந்திருக்கும் கதை அது. இடைக்காடர் எப்போது வாழ்ந்தார் என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் அவர் கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் இருந்திருக்கவேண்டும். என்று கூறப்படுகிறது. அவர் அறுநூறு ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் சொல்கிறார்கள்.

கண்ணன் தோன்றிய யாதவ குலத்தில்தான் இடைக்காடரும் தோன்றினார். இடைக்காடர் என்ற பெயரும் அவர் இடையர் குலத்தைச் சார்ந்தவர் என்பதனால் அமைந்த பெயர்தான். அவர் பாடல்கள் தாண்டவக் கோனே என்ற வார்த்தைகளுடன் முடியும். கோன் என்பது இடையர்களைக் குறிக்கும் சொல். கண்ணன் கீதையில் போதித்த கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! என்ற கர்ம யோகத்தைக் கடைப்பிடித்தவர் இடைக்காடர். இடைக்காடர் நல்ல குணங்களாலேயே உருவானவர். சூதுவாது ஒரு சிறிதும் அறியாதவர். குழந்தைபோல் வெகுளியானவர். அமைதி நிறைந்தவர். மிகுந்த பணிவானவரும்கூட. இப்படிப்பட்ட இடையரை எல்லாருக்கும் பிடித்திருப்பது இயல்புதான். மக்கள் அவரை நேசித்தார்கள். ஆடுகளைப் புல்வெளியில் மேய்ப்பதற்காக காலையில் அழைத்துச் செல்வார் அவர். திறந்த வெளியில் அவற்றை மேய விடுவார். இரவு அவற்றைக் கொட்டிலில் கொண்டுவந்து அடைப்பார். இதுதான் அவரது தினப் பணி. நாள்தோறும் தவறாமல் இந்தப் பணி நடந்துகொண்டிருந்தது.

இப்படியான காலத்தில், ஒருநாள்  காலை அவரது குடிலைத் தேடிவந்தார் தவத்தில் சிறந்த ஒரு முனிவர்.  பார்த்தாலே அவர் மாபெரும் சித்தர் என்று தெரிந்தது. அவரது முகத்தைச் சுற்றி இன்னதென்றறிய இயலாத ஒரு புனித ஒளிபடர்ந்திருந்தது. அவரைப் பார்த்த இடைக்காடர் அளவற்ற வியப்படைந்தார். இவர் நம் வீடு தேடிவந்தாரே என மகிழ்ந்தார். உடன் எழுந்துநின்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அன்போடு ஓர் ஆசனத்தை அளித்து அதில் அமருமாறு அவரை மிகுந்த பிரியத்துடன் வேண்டினார். ஒரு கோப்பை ஆட்டுப் பாலைக் கொடுத்து அவரை அருந்திப் பசியாறச் சொல்லி உபசரித்தார். இடைக்காடரின் உபசரணைகளால் மகிழ்ந்த அந்தத் துறவி மேலும் சில நாட்கள் இடைக்காடர் குடிலிலேயே தங்கினார். இடைக்காடரது நல்லியல்புகளால் பெரிதும் கவரப்பட்ட அவர் தம் உபதேசங்களைச் செய்வதற்கு ஏற்ற சீடர் அவர்தான் என முடிவு செய்தார். பல அரிய உபதேசங்களைச் செய்த அவர். பலமுக்கியமான சித்துக்களையும் அவருக்குக் கற்றுத்தந்தார். யோகத்தில் பல உயர்ந்த நெறிகளை அவருக்குப் பயிற்றுவித்தார். இறுதியில் ஒரு முக்கியமான அறிவுரையையும் இடைக்காடருக்குச் சொல்லலானார் அவர்: மகனே! பலரும் இதுபோன்றவற்றைக் கற்கிறார்கள். ஆனால் உலகியல் ஆசைகளால் உந்தப்படுகிறார்கள். தங்களின் சுயநலனுக்காக தாங்கள் கற்ற வித்தைகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். தாங்கள் எவ்வளவு சக்தி படைத்தவர்கள் என்பதை அடுத்தவர்களுக்குக் காண்பிப்பதில் தங்கள் வித்தையைப் பாழ்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டோர் மந்தை மந்தையாக இருக்கிறார்கள். நீ அப்டிப்பட்ட மந்தையில் அவர்களைப்போன்ற ஓர் ஆடாக இருக்கப் போகிறாயா? யோசித்துப் பார். உண்மையில் நான் கற்றுத் தந்தவற்றை நீ உலக நலனுக்காகப் பயன்படுத்தவேண்டும். உலகை வழிநடத்தும் வகையில் நீ மனவளர்ச்சி அடையவேண்டும் மகனே!

இப்படிச் சொன்ன அந்த முனிவர் சற்றுநேரம் இடைக்காடரின் விழிகளையே உற்றுப்பார்த்தார். அது நயன தீட்சை என்பதை இடைக்காடர் அறியவில்லை. அப்படி உற்றுப்பார்த்ததன் மூலம் தான் பெற்ற அத்தனை ஞானத்தையும் இடைக்காடருக்கு வழங்கிவிட்டார். அந்த முனிவர். தம் ஆற்றல்களை இடைக்காடர் மிகச்சரியாக உலக நன்மைக்கே பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையோடு, இடைக்காடரின் தலையைத் தடவி ஆசிவழங்கி நடந்து மறைந்து போனார் அவர். இடைக்காடர் மனம் அந்த முனிவர் சொன்ன செய்திகளாலும் அவர் கற்பித்த அரிய யோக நெறிகளாலும் தளும்பிக்கொண்டிருந்தது. அவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்த அவர் நாள்தோறும் அவற்றைப் பயிற்சி செய்யலானார். பயிற்சி அதிகமாக அதிகமாக இடைக்காடரின் அகக்கண் திறந்தது. அவர் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் மேய்த்துக் கொண்டே ஆன்மிகத்திலும் ஈடுபட்டது அவர் மனம். ஒருநாள் அவரது ஞானக்கண் விரைவில் வரவிருக்கும் கடுமையான பஞ்ச காலத்தை அவருக்கு உணர்த்தியது. என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. நவகிரகங்கள் ஒன்றை யொன்று பார்த்துக் கொள்வதால் அத்தகைய கொடூரமான பஞ்சம் உலகைத் தாக்கப்போகிறது என்பதை அவரது நுண்ணறிவு அவருக்கு உணர்த்தியது. ஆடுகளை மேய்க்கும்போதெல்லாம் ஆநிரைகளை மேய்த்த கண்ணனையே அவர் மனத்தில் தியானித்து வந்தார். கண்ணா, கடும் பஞ்ச காலத்திலிருந்து தப்பிக்கவும் பின்னர் உலகம் பஞ்சம் நீங்கி வளம்பெறவும் நீதான் வழிகாட்ட வேண்டும் என்று ஓயாமல் பிரார்த்தித்தார்.

அவருக்கு கண்ணன் அருளால் திடீரென்று ஓர் யோசனை உதித்தது. தன் மந்தையிலுள்ள ஆடுகளை எருக்கிலை சாப்பிடப் பழக்கினார் அவர். பொதுவாக பால்வடியும் எருக்கிலையை ஆடுகள் சாப்பிடாது. எருக்கஞ்செடிகள் தண்ணீரே இல்லாத பிரதேசத்திலும் வளரக் கூடியவை. அவர் வற்புறுத்தி எருக்கிலையைக் கொடுத்துப் பழக்கியதால், அவரது மந்தையில் உள்ள ஆடுகள் மட்டும் எருக்கிலை சாப்பிடும் பழக்கத்திற்குத் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டன. இடைக்காடர் ஏன் இவ்விதம் தம் மந்தையில் உள்ள ஆடுகளை எருக்கிலை சாப்பிட வைக்கிறார் என்பதைப்பற்றி மக்கள் ஏதும் அறியவில்லை. அதோடு முன்யோசனையாக இன்னொரு செயலையும் செய்தார் இடைக்காடர். சாமை, வரகு ஆகிய இரு தானியங்களையும் நீர்ப்பிடிப்புள்ள களிமண்ணில் நன்கு கலந்தார். அவற்றைத் தன் குடிலின் சுவர்களில் சுண்ணாம்பு பூசுவதுபோல் பூசிவிட்டார். பார்க்க களிமண் பூசியதுபோலத் தோற்றமளித்த சுவர்களின் உள்ளே சாமையும் வரகும் கலந்திருக்கின்றன. காலச் சக்கரம் மிக வேகமாக உருண்டது. அந்த கடும் பஞ்சகாலம் வந்தது. உண்ண உணவின்றி மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்து போனார்கள். ஆநிரைகள் பலவும் சாப்பிடபுல்லோ பசுந்தழையோ இன்றி இறந்துபோயின.

ஆனால் இடைக்காடரின் மந்தையைச் சேர்ந்த ஆடுகள், வறட்சியிலும் வளரும் எருக்கிலைகளை சாப்பிட்டுக் கொழுத்துவந்தன. எருக்கிலை சாப்பிட்டுக் கொழுத்த ஆடுகளின் உடல் தின வெடுத்தது. அவை தங்கள் உடலை குடிலின் சுவரில் உராய்ந்தன. அப்போது மண் உதிர்ந்து அதன் உள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வரகும் சாமையையும் ஆட்டுப்பாலோடு கலந்து உணவாக உண்ணலானார் இடைக்காடர். அவ்விதம் ஆடுகள் வாழ்ந்ததைப் போலவே அவரும் உயிர்வாழலானார். பஞ்சம் பல்லாண்டுகள் தொடர்ந்ததால் மக்கள் பலரும் மாண்டுபோனார்கள். ஆனால் இடைக்காடரின் மந்தையில் உள்ள ஆடுகளும் இடைக்காடரும் மட்டும் அமைதியாக பஞ்சத்தை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். பஞ்சத்தால் உலகம் முழுவதையும் அழிக்க வேண்டும் என்று நினைத்த நவகிரகங்களுக்கு இடைக்காடரின் வாழ்வு ஒரு புரியாத புதிராக இருந்தது. எப்படி இந்தப் பஞ்ச காலத்தை சமாளிக்கிறார் இடைக்காடர்? எப்படி இவரது ஆடுகள் மட்டும் கொழுத்து உயிரோடு தென்படுகின்றன? அதை அறிந்துகொள்ள வேண்டி ஒன்பது கிரகங்களும் ஒன்றாக ஒருநாள் இடைக்காடரின் குடிலுக்கு வருகை தந்தார்கள். அதற்காகத்தானே காத்திருந்தார் இடைக்காடர்?

தன் இல்லம் தேடிவந்த நவகிரகங்களை முறையாக உபசரித்தார் இடைக்காடர். பணிவிலும் விருந்தோம்பலிலும் அவர் வல்லவராயிற்றே? நவகிரகங்கள் ஒன்பது பேருக்கும் தர்ப்பாசனம் அளித்து அமரச் சொன்னார். வரகையும் சாமையும் கொஞ்சம் ஆட்டுப் பாலையும் கொடுத்து அவர்களை அன்போடு உண்ணச் சொன்னார். நவகிரகங்கள் அவற்றை உண்டு மகிழ்ந்தார்கள். சற்றே படுத்துறங்கலாமே என்று பணிவோடு விண்ணப்பித்தார் இடைக்காடர். அதுவும் சரிதான்; உணவுண்ட பின் சற்று உறக்கம் கொள்ள வேண்டியதுதான் என்றெண்ணிய நவகிரகங்கள் படுத்துறங்கி ஓய்வெடுக்கலானார்கள். நவகிரகங்கள் அனைவரும் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டவுடன் பரபரவென்று செயல்படலானார் இடைக்காடர். நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்ப்பதால்தான் உலகில் இத்தனை பஞ்சம் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே உறங்கும் நவகிரகங்களை ஓசையில்லாமல் இடம் மாற்றிப் படுக்கவைத்தார். அவர்கள் ஒருவரையொருவர் பார்க்க இயலாதவாறு அவர்களின் வரிசை முறையே மாற்றிவைத்தார். பின் தன் தவ ஆற்றலாலும் யோக சக்தியாலும் அந்த வகையிலேயே அவர்கள் விழித்தபிறகும் இருக்குமாறு அவர்களை மந்திரங்களால் கட்டினார்.

நவகிரகங்கள் உறங்கி எழுந்தபோது தாங்கள் மந்திரங்களால் கட்டப்பட்டிருப்பதையும் ஒருவரையொருவர் பார்க்க இயலாதவாறு தங்களின் வரிசையமைப்பு மாறியிருப்பதையும் கண்டார்கள். இந்த அரிய சாதனையைச் செய்தவர் இடைக்காடரே என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். தன் நலனுக்காக அல்ல; உலக நலனுக்காக அவர் இந்தச் செயலைச் செய்திருக்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். எனவே அந்த நற்செயலுக்கு மரியாதை தந்து நவகிரகங்களும் அவருக்குக் கட்டுப்பட்டார்கள். மறுகணம் வானில் இடி இடித்தது. மின்னல் மின்னியது. சோவென மழை பெய்யத் தொடங்கியது. மீண்டும் புவியில் பயிர் பச்சை தழைத்து பஞ்சம் நீங்கியது. நவகிரகங்கள் இடைக்காடருக்கு ஆசி வழங்கி மறைந்தார்கள். இடைக்காடரின் பெருமையுணர்ந்த அந்தப் பகுதி மக்கள் ஓடோடி வந்து அவரைப் பணிந்தார்கள். அவரை கண்கண்ட தெய்வம் என்றே போற்றினார்கள். இடைக்காடர் முறுவல் பூத்தார். குழந்தைகளே! என் பெருமை ஏதுமில்லை. ஓம் நமசிவாய மந்திரத்தை ஓயாமல் ஜபியுங்கள். பரமசிவனையும் கண்ணனையும் நாள்தோறும் வழிபடுங்கள். உலகம் சுபிட்சமாக இருக்கும்! இனி பஞ்சம் வராது. நீங்கள் எல்லாரும் ஆனந்தமாக வாழ்வீர்கள்! என்று இடைக்காடர் அறிவுறுத்தினார். அறுநூறு ஆண்டுகள் வாழ்ந்த இடைக்காடர் திருவண்ணாமலையில் முக்தி அடைந்தார். இடைக்காடர் ஞான சூத்திரம், இடைக்காடர் கணித நூல் இரண்டும் அவர் எழுதிய புகழ்பெற்ற நூல்கள். இடைக்காடரை தியானிப்பதன் மூலம் அறிவு தூண்டிவிடப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நவகிரகங்களையே மாற்றியமைத்த இடைக்காடர் பதினெண் சித்தர்களில் முற்றிலும் வித்தியாசமானவர்தான்.
காலம்: இடைக்காடர் முனிவர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 600 ஆண்டுகள் 18 நாள் ஆகும்.

 
மேலும் 18 சித்தர்கள் »
temple news

வான்மீகர் மார்ச் 06,2013

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்
 
temple news

உரோமரிஷி மார்ச் 06,2013

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்
 
temple news
இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்
 
temple news

நந்தீஸ்வரர் மார்ச் 06,2013

நந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்
 
temple news

மச்சமுனி மார்ச் 06,2013

மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar