பதிவு செய்த நாள்
02
பிப்
2011
04:02
ரங்கநாதா, திருவரங்கப்பெருமானே! காவிரி சூழ் நாயகனே! இந்த பாழும் மனிதர்களின் சந்தேகத்தை தீர்த்து வை. இந்த மனிதகுலம் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களுக்குப் புரியும் பாஷையிலே, பல குறிப்புகளை எழுதி வைத்தேனே! அப்படிப்பட்ட எனக்கு, இவர்கள் தந்திருக்கும் பரிசைப் பார்! என்னைத் திருடன் என்கிறார்கள். நானா திருடன். கயிலையிலே சிவபெருமானை காணச்செல்லும் சித்தர்களில் நானும் ஒருவன். அங்கே செல்லும் போது, குளிர் தாங்க முடியவில்லை என்பதற்காக கம்பளிச் சட்டை அணிந்தேன். அதையே நிரந்தரமாக எங்கு சென்றாலும் அணிந்து கொள்கிறேன். அதனால் தானே என்னை சட்டை முனி என்றே எல்லாரும் அழைக்கிறார்கள்! இந்த உடையைத் தவிர வேறெந்த ஆடம்பரமும் இல்லாத நானா உன் அணிகலன்களுக்கு ஆசைப்படுவேன்! நீயே இவர்களிடம் உண்மையை நிரூபி, என கதறினாரோ இல்லையோ, அர்த்தஜாம பூஜைக்குப் பின் சாத்தியிருந்த ரங்கநாதர் கோயில் கதவுகள் தானாகவே திறந்தன.சட்டை முனி மீது குற்றம் சாட்டியிருந்தவர்களெல்லாம் பதறிப் போனார்கள். மன்னன் தலை குனிந்தான். சரியாக விசாரிக்காமலும், இந்த சித்தரின் மேன்மை புரியாமலும் சந்தேகப் பட்டு விட்டோமே என மனம் வருந்தினான்.யார் இந்த சட்டை முனி?கடல்சூழ் இலங்கையிலே சிங்கள தாசிப்பெண் ஒருத்திக்குப் பிறந்தவர் சட்டை முனி. இந்தப் பெண்மணியும், அவரது கணவரும் பிழைப்புக்காக தமிழகம் வந்தனர். சட்டைமுனி இளமையிலேயே தியானம், தவம் என அலைந்தார். மகனைச் சீர்திருத்தி, இல்லறத்தில் அடியெடுத்து வைக்கச் செய்ய மிகவும் போராடினர் பெற்றோரான சிங்கள தம்பதியர். மிகவும் கட்டாயப்படுத்தி மகனுக்கு திருமணமும் செய்து வைத்து விட்டனர்.ஆனால், இறைவன் சித்தமோ வேறு மாதிரியாய் இருந்தது. சட்டைமுனிக்கு இல்லறத்தில் அறவே நாட்டமில்லை. துறவறம் பூண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். காடு, மலைகளில் திரிந்த அவர் போகர், திருமூலர், அகத்தியர் ஆகிய சித்தர்களைத் தரிசித்து அவர்களுடன் உரையாடி தானும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமெனவும், தனக்கு உபதேசிக்கும்படியும் வேண்டினார்.
ஒருமுறை உரோமசர் என்ற முனிவரை பொதிகை மலையில் தரிசித்தார். கயிலைக்குச் செல்லாமல் பொதிகைக்கு சிவபெருமானை வரவழைக்கும் அற்புதமான தவத்தில் ஈடுபட்டிருந்தவர் இந்த முனிவர். ஒருமுறை சிவன் இவருக்கு காட்சி கொடுத்து, முனிவரே! கயிலையில் கங்கைக்கு ஈடான பலன் கொடுக்கும் நதி ஒன்று அகத்தியரால் இங்கு பிறக்கும். தாமிரபரணி எனப்படும் அந்த நதி வற்றாத ஜீவநதியாக ஓடும். அந்நதியில் நீ ஒன்பது தாமரை மலர்களை மிதக்க விடு. அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கம் அமைத்து வழிபடு. கயிலைக்கு அடுத்தபடியாக பொதிகையும் என் இருப்பிடங்களில் ஒன்றாக உன் விருப்பப்படியே அமையும், என்று அருள்பாலித்தார். (இந்த தலங்களே தற்போது நவகைலாயங்கள் என்ற பெயரில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன).இப்படி சிவதரிசனம் பெற்ற உரோமசரைச் சந்தித்த சட்டை முனி, முனிவரே! இந்த மக்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்களாக உள்ளனர். அடுத்தவர்களின் குறைகளைக் காணுகிறார்களே தவிர தங்கள் குறையைக் களைவது பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இந்த மக்களை நேர்வழிப்படுத்த விரும்புகிறேன். அதற்கு தாங்களே வழிசெய்ய வேண்டும், என்றார். அன்பனே! உன் உயர்ந்த நோக்கம் எனக்குப் புரிகிறது. சிவபெருமானே இதற்கு உனக்கு வழிகாட்ட இயலும். அவரது தரிசனம் வேண்டுமானால் நீ கயிலைக்குச் செல். அவரை வழிபடு. கயிலைக்கு நீ இங்கிருந்து நடந்து செல்ல முயற்சிக்காதே. கடுமையான தவமிரு. அஷ்டமாசித்திகளை உன்னுள் வரவழைக்க கடும் பயிற்சி மேற்கொள். அவற்றை நீ அடைந்து விட்டால், உன் உடம்பைப் பஞ்சாக்கி நீ எந்த இடத்திற்கும் செல்ல முடியும், என அருளுரை வணங்கினார்.சட்டைமுனி சதுரகிரி எனப்படும் மலைக்கு வந்தார். அங்கே பல சித்தர்களின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவர்களுக்கு சேவை செய்து, அவர்களின் நம்பிக்கையை பெற்று அஷ்டமாசித்திகளை அடைந்தார். கடும் தவத்தின் பேரில் கயிலைக்குப் பறந்து சென்றார்.
கயிலைமலையான் இவரது முயற்சியைக் கண்டு, நண்பன் போல இவருடன் பேசினார்.சிவதரிசனம் பெற்ற சட்டைமுனி மீண்டும் தென்னகம் வந்தார். மக்களின் நோய் போக்க தமிழிலேயே மருத்துவக்குறிப்புகளை எழுதினார். அத்துடன் மக்கள் சுபிட்சமாக வாழவும், இறந்தவர்களை எழுப்பும் வழிமுறைகளையும் பகிரங்கமாக எழுதினார். இறந்தவர்களை எழுப்பும் கலையை சித்தர்கள் சங்கேத மொழியிலேயே குறித்து வைப்பர். ஏனெனில், சித்தர்களின் குறிப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம். சட்டை முனி பகிரங்கமாக எழுதியதால் ஆத்திரப்பட்ட சில சித்தர்கள் அந்தக் குறிப்புகளை கிழித்து எறிந்து விட்டனர். எனவே, அவரது மருத்துவக் குறிப்புகளும், இன்னும் சில பயனுள்ள தகவல்களும் மட்டுமே எஞ்சின. மேலும், சட்டைமுனிவர் பற்றி சிவபெருமானிடமும் புகார் சொல்லி, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.இந்நிலையில் ஸ்ரீரங்கம் வந்த சட்டைமுனி ரங்கநாதனைச் சேவிக்கச் செல்லும்முன் அர்த்தஜாம பூஜை முடிந்து நடை அடைக்கப்பட்டு விட்டது. சட்டைமுனி வெளியில் இருந்தபடியே, ரங்கநாதா! உன்னை இன்றைக்குள் தரிசிக்க அவசர அவசரமாக வந்தேனே! பயனின்றி போய் விட்டதே, எனச் சொல்லி அரற்றினார்.தன் பக்தனின் அபயக்குரலைக் கேட்ட பெருமாள் நடையைத் திறக்கச் செய்தார். சித்தர் கருவறை அருகே சென்றதும், தனது அணிகலன்களை அவருக்கு சட்டை போல் அணிவித்தார்.(இதனாலும் இவர் சட்டைமுனி என பெயர் பெற்றார் என்பதுண்டு). அப்போது, ஊர் மக்கள் அவரைத் திருடனென சந்தேகித்து அரசனிடம் கொண்டு போய்விட, மேற்கண்ட சம்பவம் நிகழ்ந்தது. திருவரங்கம் இறைவன் முன் நிறை சட்டைமுனி இறைவனுடன் ஒன்றாகக் கலந்து மறைந்தார். சட்டைமுனி சித்தர் ஜீவ சமாதி திருவரங்கத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் திருவரங்கம் அல்லது சீர்காழியில் சமாதியாகி இருக்கலாம் என நம்புகின்றனர். சித்தர்களில் குறிப்பிட்ட நாளில் விரதம் இருப்பது இவருக்கு மட்டுமே. திருவோணம், புனர்பூசம், பூசம், திருவாதிரை நட்சத்திர நாட்களிலும், புதன்கிழமைகளிலும், அமாவாசை மற்றும் வாஸ்து தினத்தன்றும் ஸ்ரீசட்டைநாத மாமுனி தர்ப்பயாமி என்று குறைந்தது 18 முறையும், அதிகபட்சமாக 108 முறையும் சொல்லி வழிபட்டால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.
நூல்:
சட்டைமுனி நிகண்டு 1200
சட்டைமுனி வாதகாவியம் 1000
சட்டைமுனி சரக்குவைப்பு 500
சட்டைமுனி நவரத்தின வைப்பு 500
சட்டைமுனி வாகடம் 200
சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் 200
சட்டைமுனி கற்பம் 100
சட்டைமுனி உண்மை விளக்கம் 51
தியானச் செய்யுள்:
சித்த வேட்கை கொண்டு
சிறந்து விளங்கிய சீலரே
அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற
அற்புத மூர்த்தியே
எம் அறியாமை நீக்கி ஞானவரம்
அருள்வாய் ஸ்ரீ சட்டை முனி ஸ்வாமியே
காலம்: சட்டைமுனி ஆவணி மாதம் மிருகசீருஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 14 நாள் ஆகும்.