பதிவு செய்த நாள்
14
டிச
2012
05:12
ஆண்டாள் தன்னை கண்ணனின் காதலி நப்பின்னையாகவும், தோழிகளைக் கோபியராகவும், ஸ்ரீவில்லிபுத்தூரை கோகுலமாகவும் கருதிப் பாடிய பாடல்களின் தொகுப்பே திருப்பாவை.மார்கழியில் திருப்பாவை பாடினால் பணம் கொட்டுமா? கார் வாங்க முடியுமா? இப்போதிருக்கும் அபார்ட்மென்டை மாற்றிவிட்டு தனியாக பங்களா வாங்கலாமா? என்றெல்லாம் கணக்குப் போட்டால், அது எதுவுமே நடக்காது. அப்படி எதுவுமே தராதென்றால், நான் ஏன் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி பாவையைப் பாட வேண்டும் என்று கேட்டால், அது எல்லாமே தரும் என்பது தான் பதில். குழப்பமாக இருக்கிறதல்லவா? ஆம்...திருப்பாவை சரீர சுகம் தருவதற்கானது அல்ல. அதாவது, இந்த உடலுக்கு சுகம் தரும் எந்த விஷயத்தையும் இது தராது. ஆனால், ஆத்மபலனை இது தரும். எவ்வளவு சுகத்தை இந்த பூமியில் அனுபவித்தாலும், ஒருநாள் அந்த பூமிக்கு போன பிறகு, தேவையான வசதி கிடைக்க வேண்டுமே! அந்த ஆத்மபலனை திருப்பாவை தரும். ஆத்மபலன் கிடைத்து விட்டால் எல்லாமே கிடைத்த மாதிரி தான். பசி, தூக்கம், துக்கம், தாகம் எதுவுமே அந்த உலகில் இருக்காது.
மார்கழி வெப்பத்தில் கரைந்த பனி: புள்ளின் வாய் கீண்டானை என்ற 13ம் பாடலில், குள்ளக்குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக்கிடத்தியோ? என தன் தோழியிடம் கேட்கிறாள். குறுகும்படியான மார்கழி பனியில், அதிகாலை பிரம்ம முகூர்த்த துவக்கத்தில் (காலை 4.30) குளிக்க வரும்படி தோழிக்கு அழைப்பு விடுக்கிறாள். மார்கழியில் ஆற்றில் குளிப்பவர்கள், உடல் குளிரும்படியாக குளிக்க வேண்டும் என்கிறாள் ஆண்டாள். பனியில் உடல் சர்வமும் ஒடுங்கி விடும். உடல் ஒடுங்கினால் மனம் ஒடுங்கும். மனம் ஒடுங்கினால் இறைவழிபாட்டில் லயிக்கும். இந்த வரிக்கு ஒரு விளக்கம் உண்டு. யமுனைக்கரையில் மார்கழி அதிகாலையில் துறவிகளெல்லாம் பிரம்மமுகூர்த்த வேளையில், நீராடக் காத்திருப்பார்கள். ஏன் காத்திருக்க வேண்டும்? குளித்து விட்டு போக வேண்டியது தானே, அங்கே குளிக்க முடியாது. தண்ணீர் உறைந்து பனியாய் மாறியிருக்கும். அப்போது கண்ணனையே அடையத்துடிக்கும் கோபிகாஸ்திரீகள் வருவார்கள். அவர்கள் நதியில் கால் வைத்தார்களோ இல்லையோ, அப்படியே பனி உருகி ஓடியது. ஏன் தெரியுமா? அவர்களுக்குள் இருக்கும் கிருஷ்ண தாபமான வெப்பம், அந்தப்பனியைக் கரைத்து விட்டது. அதுபோல், தோழியரையும் கிருஷ்ணனை மனதில் சுமந்தபடி மார்கழியில் நீராடினால் குளிர்ச்சி தெரியாது என்கிறாள் ஆண்டாள்.