மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2025 02:06
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஆனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் துவங்கி, இரவு 12 மணி வரை நடந்தது. கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். ஏ.டி.எஸ்.பி., தினகரன் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.