கம்பிளியம்பட்டி வராகி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பதிவு செய்த நாள்
08
ஜூலை 2025 12:07
சாணார்பட்டி; கம்பிளியம்பட்டி வராகி புரத்தில் உள்ள வரசித்தி வராகி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இவ்விழாவையொட்டி புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் ஊர்வலமாக யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டது. விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், உட்பட பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோயில் உச்சியில் உள்ள கலசங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், பாடகர் மங்கையர்கரசி, காங்.,தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவர் பாலகணேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கம்பிளியம்பட்டி வரசித்தி வராகி அம்மன் கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் செய்திருந்தார். ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் அருகே சக்கம்பட்டி ஸ்ரீகன்னிமூல கணபதி, மகாகாளியம்மன், முத்தாலம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மங்கல இசையுடன் விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி பூமாதேவி வழிபாடு நடந்தது. மறுநாள் காலை கணபதி ஹோமம் நவக்கிரக வழிபாடு கோமாதா பூஜை, தீர்த்தங்கள் அழைத்தல், முளைப்பாரி அழைத்தல் நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசம் வைத்தல், அஷ்டபந்தனம் சாத்துதல் நடந்தது. அன்று மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை நான்காம் காலை யாக பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீகன்னிமூல கணபதி, மகாகாளியம்மன், முத்தாலம்மன் கோயில் கலசங்களுக்கு பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. இதைதொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது. சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. வடமதுரை: வடமதுரை வி.சித்துாரில் ஸ்ரீ விநாயகர், முருகன், பட்டவன், பாபாத்தியம்மன், நாகம்மாள், சின்னம்மாள், பெரியகருப்பு, சின்னகருப்பு கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும் நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீரூற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். சாணார்பட்டி: கெம்மணம்பட்டி வீருதிம்மம்மாள் மலைக்கோயில், பெருமாள்சாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் கோவில் முன் அமைக்கப்பட்ட யாக சாலையில் கணபதி பூஜையுடன் பல்வேறு யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. கருடர்கள் வானத்தில் வட்டமிட பக்தர்கள் கோஷமிட்டனர். மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. செந்துறை: பாதசிறுகுடி வீரசக்திவிநாயகர், பொன்னர்சங்கர், மகாமுனி , பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம்நடந்தது. இரண்டு கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளதாள இசையுடன் புனித நீர் கலசத்தில் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
|