பதிவு செய்த நாள்
20
ஜூலை
2025
06:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று முதல் தினமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனத்திற்கு வந்தனர். இன்று ஆடி கார்த்திகை, விடுமுறை தினம், ஒருவாரத்திற்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்ததாலும் திரளான பக்தர்கள் வந்தனர்.
மூன்று மணி நேரம்; அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பே ஆயிரக்கணக்கானோர் கோயில் முன்பு கூடினர். தொடர்ந்து வருகை அதிகரித்தபடி இருந்தது. பக்தர்கள் வரிசையாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கோயில் முன்பு இருந்து அவனியாபுரம் பிரிவு சாலை வரை 2 கி.மீ., க்கு பக்தர்கள் ரோட்டில் வரிசைகட்டி நின்றனர்.
கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க கோயிலின் முன்வாசல் கேட் அடைக்கப்பட்டு, கோயிலுக்குள் கூட்டம் குறைந்ததும் மீண்டும் கேட்டுகள் திறக்கப்பட்டன. வழக்கமாக கோயில் வாசலில் கட்டண தரிசனம், பொது தரிசனம் என இரு வரிசை அமைக்கப்படும். ஆனால் நேற்று அனைவரையும் ஒரே வரிசையில் அனுப்பியதால் நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் நின்றனர். கோயிலுக்குள் ஆங்காங்கே பக்தர்களை நிறுத்தி நிறுத்தி அனுப்பியதால் பலர் நெரிசலில் சிக்கினர். வழக்கம்போல் 2 வரிசைகளில் அனுப்பி இருந்தால் சிரமம் இன்றி தரிசனம் செய்திருப்பர். கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள், வயதானோர், கூட்டத்தைப் பார்த்து கோயில் வாசலிலேயே தரிசனம் செய்து புறப்பட்டனர். வழக்கமாக மதியம் 1:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். நேற்று பக்தர்கள் கூட்டத்தால் இருந்ததால் மதியம் 2:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது. அப்போது கோயிலுக்குள் பெரிய நிலைக் கதவுகள்வரை பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் முடித்து திரும்புவதற்கு மாலை 4:00 மணி ஆகிவிட்டது. எனவே, நேற்று மதியம் மூல ஸ்தானம் அடைக்கப்படவில்லை.
பக்தர்களின் கோரிக்கை:; கும்பாபிஷேகத்தை காண முடியாதவர்கள் 48 நாட்களுக்குள், மண்டலாபிஷேகம் வரை கோயிலில் தரிசனம் செய்தால் கும்பாபிஷேகம் பார்த்த பலன் கிடைக்கும் என்பதால் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர். மண்டலாபிஷேகம் வரை மதியமும் கோயில் நடை திறந்து, தரிசனத்திற்கு அனுமதித்தால் பக்தர்கள் சிரமத்தை தவிர்க்கலாம் எனக்கூறினர்.