திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று முகூர்த்த நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விசேஷ நாட்களில், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதத்தின் முதல் முகூர்த்த நாளான இன்று கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள், சரவண பொய்கை குளத்தில் நீராடி, சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். அதேபோல், கோவில் உற்சவர் சன்னதியில் நடந்த திருமணத்திற்கு மணமக்கள், பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருப்போரூர் மற்றும் மற்ற ஊர்களில் திருமணம் முடித்தோரும், கந்தசுவாமி கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசித்தனர்.