சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி பிரமோற்ஸவ விழா தேரோட்டம் நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் செப்., 25 அன்று கொடியேற்றத்துடன் புரட்டாசி பிரமோற்ஸவ விழா துவங்கியது. தினமும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் காலையில் காலசந்தி ேஹாமம், பலி, திருவீதி உலா நடைபெற்றது. தினமும் இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் அன்னம், சிம்மம், அனுமன், தங்க கருடன், சேஷ, யானை, வெள்ளி கேடயம், குதிரை, புன்னைமர வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 9ம் நாளான இன்று 9:45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தனர். தேர் நிலையில் சிதறு தேங்காய் உடைத்து, இன்று காலை 10:02 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்கியது. தேர் நான்கு ரதவீதிகளை சுற்றிவந்து மீண்டும் காலை 10:45 மணிக்கு நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என கோஷமிட்டு தேரை இழுத்து சென்றனர். விழா ஏற்பாட்டை தேவஸ்தான நிர்வாகிகள், நகரத்தார் செய்திருந்தனர்.