திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டனர். நினைக்க முக்தி தரும் தலமாகவும், பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, ஸ்வாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் ஸ்வாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டனர். மேலும் பக்தர்கள் நவக்கிரக சன்னதிகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு கிரிவலம் சென்றனர். இதையொட்டி, கோவில் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கூட்டம் அலை மோதியதால், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.