பதிவு செய்த நாள்
08
ஜன
2013
10:01
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. "1,017 படிகள் கொண்ட அய்யர்மலையில், ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, இரண்டு கோடியே, 98 லட்ச ரூபாய் செலவில் ரோப்கார் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 2ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அய்யர்மலையில் ரோப்கார் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மேலும், ரோப்கார் அமைக்க பொதுமக்கள் பங்களிப்பாக வழங்கிய, இரண்டு கோடியே, 38 லட்ச ரூபாய், குளித்தலை கே.வி.பி., வங்கியில் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால், "அய்யர்மலையில் ரோப்கார் அமைக்கும் பணியை, அ.தி.மு.க., அரசு துவங்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து "காலைக்கதிர் நாளிதழிலும் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் இளங்கோ தலைமையில், சிறப்பு குழுவினர், அய்யர்மலையில் ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து குளித்தலை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், எம்.எல்.ஏ., பாப்பா சுந்தரம், இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.