தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையில், மலையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு, காற்று புகாத டப்பாக்களை வனத்துறையினர் வழங்கியுள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, பக்தர்கள் தரிசிக்க ஆண்டுதோறும், பிப்., முதல் மே மாதம் வரை, வனத்துறையினர் அனுமதியளித்து வருகின்றனர். இந்தாண்டு மலை ஏறுவதற்கு, கடந்த, 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை மலை மீது கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், மலைப்பாதையின் துவக்கத்தில் உள்ள படிக்கட்டுப் பாதையில், வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து, பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்த பின்பே அவர்களை மலையேற அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியங்கிரி மலையில், மலைவாழ் மக்கள் அமைத்துள்ள கடைகளில், பிளாஸ்டிக் கவர்களில், கடலை போன்ற உணவுப் பொருட்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். வனப்பகுதியில் பிளாஸ்டிக்கை முற்றிலும் தடை செய்ய, வனத்துறையினர் மேலும் ஒரு முயற்சியாக, தனியார் நிறுவனத்தின் உதவியுடன், காற்று போகாத மூடியுடன் கூடிய டப்பாவை, மலையில் கடை வைத்துள்ள மலைவாழ் மக்களுக்கு வனத்துறையினர் இலவசமாக வழங்கியுள்ளனர். இதன் மூலம், உணவுப் பொருட்கள் வைக்க பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.