அன்னூர் மாரியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2026 04:03
அன்னூர்; அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவங்கியது.
அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலில், 36ம் ஆண்டு பூச்சாட்டு திருவிழா கடந்த 24ம் தேதி துவங்கியது. அதிகாலையில் விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமமும் நடந்தது. மாலையில் பூச்சாட்டு துவங்கியது. நேற்று மாலை பூச்சாட்டு விழாவில் அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 31ம் தேதி வரை தினமும் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. ஏப். 1ம் தேதி பூவோடு எடுத்தலும், அபிஷேக ஆராதனையும் நடைபெறுகிறது. ஏப். 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு மாரியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம், ஏப். 3ம் தேதி இரவு திருவிளக்கு பூஜையும், ஏப். 6ம் தேதி அணிக் கூடை எடுத்தலும் நடக்கிறது. ஏப். 7ம் தேதி அதிகாலையில் சக்தி கரகம் எடுத்து வருதலும், பொதுமக்கள் பூவோடு எடுத்தலும் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலையில் அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது. ஏப். 8ம் தேதி காலையில் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.