பல்லடம்: பல்லடம் அருகே, மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவில், மழை வேண்டி பக்தர்கள் பூவோடு எடுத்து வழிபட்டனர்.
பல்லடத்தை அடுத்த, பணிக்கம்பட்டி ஊராட்சி, சின்னியகவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக, மே 3ம் தேதி கிராம சாந்தியுடன் பொங்கல் பூச்சாட்டு விழா துவங்கியது தொடர்ந்து, மறுநாள் காலை, 7.00 மணிக்கு பூச்சாட்டு விழாவும், இதனையடுத்து, கணபதி ஹோமம், அம்மை அழைத்தல், கும்பம் தாவுதல், மாவிளக்கு எடுத்து வருதல், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து, மழை வேண்டியும், நேர்த்திக்கடனை நிறைவேற்றும் விதமாகவும், பெண்கள், பொதுமக்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம், மஞ்சள் நீராட்டு விழாவும், நேற்று காலை மறுபூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.