திருச்சி மாவட்டம், துறையூர் கரட்டுமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில் ஆறுபடையப்பன் சிலை அமைப்பு குழு சார்பில், இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று, துறையூர் தனபால் ஸ்தபதி மூலம், 23 அடி உயர பீடம் அமைத்து, அதில், 34 அடி உயர மலேசிய பத்துமலை முருகன் போன்ற சுதை வண்ண சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி ஸ்வாமி, மகாகணபதி, ஐயப்பன், நவகிரகம், நாகதேவதை உள்ளிட்ட பரிவார தெய்வம் புதுப்பிக்கப்பட்டு, மலேசிய முருகன் சிலையுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை, பல்வேறு ஹோமம் நடைபெற்று பின்னர் புனித நீர் எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தசதானம், கோ பூஜை தரிசனம், தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.