மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வில் ஏதாவது ஒரு கடமை அல்லது வேலை இருந்து கொண்டிருக்கும். அந்தக் வேலையை தவம் போல் கருதி, கருத்துடன் செய்யும்போது மனிதன் கர்மயோகியாகிவிடுகிறான். அப்போது,நான் செய்கிறேன் என்ற ஆணவம் இல்லாமல் கடவுளுக்கு அர்ப்பணம் என்ற எண்ணத்துடன் மனிதன் கடமையைச் செய்யவேண்டும் என்கிறது பகவத்கீதை. எதிர்பார்ப்புடன் செய்யும் எந்த செயலிலும் குறைபாடு நேர்வது இயல்பே. அதுவும் எதிர்பார்ப்பு அதிகமாக ஆக, ஏமாற்றும் குணமும், பொய்மையும் அதிகரித்துக் கொண்டே போகும். அதனால், மனிதன் எதிர்பார்ப்பு ஏதுமின்றி, தன்னால் முடிந்த நல்லதை மட்டும் செய்யவேண்டும். அதையும் பற்றின்றி செய்ய வேண்டும், என்கிறார் கிருஷ்ணர். விதியால் வாழ்வில் உண்டாகும் சந்தோஷத்தையும், துன்பத்தையும் வணக்கத்துடன் ஏற்கும் பக்குவம் பெற்றிருப்பவனே கர்மயோகி. இவர்கள் மனச்சமநிலையை இழக்க மாட்டார்கள். இன்பமும் துன்பமும் போகட்டும் கிருஷ்ணருக்கே! என்ற உறுதியுடன் எப்போதும் தங்கள் பணியிலேயே மூழ்கிக் கிடப்பார்கள்.