பதிவு செய்த நாள்
22
ஜன
2013
11:01
உடுமலை: உடுமலை பகுதியில், பல நூற்றாண்டுகள் கடந்து, முன் னோர்கள் வரலாற்றை சுமந்து நிற்கும் பழமையான கோவில்கள், பராமரிப்பின்றி அவல நிலையில் உள்ளன. இக்கோவில்களை புனரமைக்க இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. உடுமலை பகுதியில் அமராவதி ஆற்றங்கரையோரம் மற்றும் மலைப்பகுதிகளில், மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில்கள் உள்ளன. அங்கு, பாண்டியர்கள், சேர, சோழ மன்னர்களின் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இக்கோவில்களில் மூன்று கால பூஜை மற்றும் திருவிழாக்கள் மேற்கொள்ள ஏதுவாக, நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. பல கோவில் கள் பராமரிப்பின்றி வீணாகி வருவதுடன், நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன.வல்லக்கொண்டம்மன் கோவில்: உடுமலை அருகே உள்ள கோட்டமங்கலம் பகுதியில், வல்லக்கொண்டம்மன் கோவில் உள்ளது.
இக்கோவில் ஐந்து பாளையக்காரர்களால் நிர்மாணிக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு முன், கற்றலி முறை யில், கட்டப்பட்டுள்ளது. மூன்று கோபுரங்களை கொண்டுள்ள இக்கோவிலில், வல்லக்கொண்டம்மன் தெற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சம்.சிவன், விஷ்ணு, கிருஷ்ணர் சன்னதிகளும் உள்ளன. பழங்கால வரலாறு மற்றும் சிற்ப கலையை எடுத்துக்காட்டும் வகையில், ஆயிரக்கணக்கான சிற்பங்களை உள்ளடக்கியுள்ளன. போதிய பராமரிப்பு இல்லாததால், கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது. தினமும் பூஜைகள் மட்டுமே நடந்து வருகின்றன.வரதராஜப்பெருமாள் கோவில்: கோட்டமங்கலத்தில், பழமைவாய்ந்த கரிவரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. கமலவல்லித்தாயார், பெருந்தேவி தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ராமானுஜர், ஆதிசேஷப் பெருமான் மற்றும் தும்பிக்கை ஆழ்வார் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. இக்கோவிலுக்குச் சொந்தமான நிலங் கள் கையகப்படுத்தப்பட்டு, குத்தகைக்கு விடப்படுகிறது. சொந்தமாக நிலங்கள் மற்றும் வருமானம் இருந்தும், கோவில் கட்ட நடவடிக்கை ஏதுமில்லை.கடந்த 2001ல் கோவில் கட்ட குழு அமைக்கப்பட்டு, மீண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2006ல் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி எடுக்கப்பட்டது; இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காததால், இந்நாள் வரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.ரங்கநாதர் கோவில்: உடுமலை அருகே உள்ள கரட்டுமடம் சஞ்சீவராயப்பெருமாள் கோவில், பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது, தற்போது போதிய பராமரிப்பின்றி கிடக்கிறது. உடுமலை அருகே உள்ள பெரியபட்டி ரங்கநாதர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில், பல நூற்றாண்டுகள் கடந்த பழமையான கோவில்கள் புனரமைக்கப்படாமல், கும்பாபிஷேகத்துக்காக காத்திருக்கின்றன.வரலாற்றை பறைசாற்றும் இக்கோவில்களை புனரைமக்க, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பக்தர்கள் இடையே நிலவுகிறது.