பதிவு செய்த நாள்
22
ஜன
2013
11:01
பேரூர்: மருதமலையில் பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க, நேற்று தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கிருத்திகை என்பதால் நேற்று அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்ககவச அலங்காரத்தில் சுப்ரமணியர் காட்சியளித்தார். அடுத்து, புண்ணியாகவாசனம், பஞ்ச கவ்யம், பூமி பூஜை, முளைப்பாரி இடுதல், அனைத்து தெய்வங்களுக்கும் கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, கணபதி ஹோமம், சுப்ரமணியசாமி ஹோமம், பூர்ணாஹுதியும் நடத்தப்பட்டு, காலை 6.45 மணிக்கு, கோவில் மூலஸ்தானம் முன்புள்ள கொடிமரத்தில் சேவல்கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் அரகரா கோஷம் எழுப்பினர். பின்னர், வீரபாகுதேவர். விநாயகர், சூலத்தேவர் மூவரையும், பக்தர்கள் சன்னதியை சுற்றி கொண்டு வந்தனர். இறுதியில், கொடிமரத்துக்கு மகாதீபாராதனை நடந்தது. திருத்தேர் வலம் வருவதற்காக, ஜலமூலையில் ஆயக்கால் போடப்பட்டது. இதையடுத்து, வரும் 27ம் தேதி, காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் தைப்பூச தேர்த்திருவிழா நடக்கிறது.