பதிவு செய்த நாள்
23
ஜன
2013
11:01
பழநி: பழநி கோயில் பஞ்சாமிர்தம் பூவன் பழத்தில் தயாரிக்கப்படுவதற்கு, சமூக சேவை சங்கங்களும், பக்தர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. திருப்பதி லட்டு, ராமேஸ்வரம் தீர்த்தம், சபரிமலை அரவணை பாயாசம் பெயர் பெற்றது போல் பஞ்சாமிர்தத்திற்கு பெயர் பெற்றது பழநி. பழநி கோயில் நிர்வாகத்தால், வின்ச் ஸ்டேஷன் அருகே உள்ள மையத்தில், பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. மலைகோயில், வின்ச் ஸ்டேஷன், திருஆவினன்குடி கோயில், மங்கம்மாள் மண்டபம், மீனாட்சி மண்டபம், புதிய தகவல் நிலையம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், ஆண்டிற்கு, 25 கோடி ரூபாய்க்கு மேல், பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது. பஞ்சாமிர்தம் தயாரிக்க, மலை வாழை, கற்பூர வள்ளி, குடகு வாழைப் பழங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. பூவன் உட்பட சில பழங்கள், பஞ்சாமிர்தத்தின் சிறப்புச் சுவையை கெடுத்து விடும். சமீபத்தில் அய்யப்ப சீசன், பாதயாத்திரை பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே பூவன் பழத்தை வாங்கி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தியுள்ளனர். இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வருத்தமில்லா வாலிபர் சங்கம், முருக பக்தர்கள் பேரவை, கலைவாணி நற்பணி மன்றத்தினர் கூறுகையில், "மலைகோயிலில் கோவில் நிர்வாகம் சார்பில் மைக் மூலம் தெரிவிக்கப்படும் அறிவிப்பில் மலை வாழைப்பழத்தில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர். பூவன் பழத்தில் தயாரித்து விட்டு இப்படி அறிவிக்கலாமா? என்றனர். கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மலைவாழைப் பழம், கற்பூர வள்ளி, குடகு பழங்களில், பஞ்சாமிர்தம் தயாரிக்க உத்தரவு உள்ளது. நாள் ஒன்றுக்கு, 25 டன்னில் இருந்து 40 டன் வரை வாழைப்பழம் தேவைப்படுகிறது.
டெல்டா பகுதியில் ஏற்பட்ட வறட்சியால், கற்பூரவள்ளி பழம் வரத்து குறைந்துள்ளது. மலைப்பழமும் வரத்து குறைந்துள்ளது. பஞ்சாமிர்த தட்டுப்பாடடை தவிர்க்க, மேற்கண்ட பழங்கள் கிடைக்காத பட்சத்தில், பூவன் பழம் வாங்குகிறோம். பூவன் பழம் வாங்க உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றுள்ளோம். அவசரம், அவசியம் கருதி கற்பூரவள்ளியை விட பூவன் பழம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை யும்உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.